‘குண்டுகள் 901 பேரணி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிணைக்கப்படுகின்றன’

திங்கட்கிழமையன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் நிகழ்ந்த மூன்று மர்மமான வெடிப்புச் சம்பவங்களை போலீஸ் இன்னும் புலனாய்வு செய்து வருகிறது.

என்றாலும் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா, ‘901 அன்வாரை விடுவியுங்கள்’ பேரணியின் பங்கேற்பாளர்கள் அந்த நாட்டு வெடி குண்டுகளைக் கொண்டு வந்திருக்கலாம் என போலீஸ் வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

பேரணி தொடங்குவதற்கு முன்னர் நீதிமன்ற வளாகத்தை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தது என்றும் அபாயகரமான எதனையும் கண்டு பிடிக்கவில்லை என்றும் அடையாளம் கூறாத போலீஸ் வட்டாரம் ஒன்று கூறியதாக அந்த மலாய் நாளேட்டின் இன்றைய முதல் பக்கச் செய்தி தெரிவித்தது.

தொடக்கப் புலனாய்வுகள், அந்தக் குண்டுகளை பேரணியில் பங்கு கொண்டவர்கள் கொண்டு வந்ததைக் காட்டியதாகவும் அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

“அந்தப் பகுதி முழுமையாக சோதனை செய்யப்பட்டதுடன் பேரணிக்கு ஒரு நாள் முன்பு தொடக்கம் போலீஸ்காரர்கள் அங்கு காவல் பணியை மேற்கொண்டுள்ளனர்.”

பேரணி பங்கேற்பாளர்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்கப்படும் முன்னர் இறுதிச் சோதனை நடத்தப்பட்டது என்றும் அபாயகரமான பொருள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் அந்த வட்டாரம் உத்துசான் மலேசியாவிடம் கூறியது.

அந்தப் பகுதியில் கேமிராக்கள் பொருத்தப்படாததால் புலனாய்வுக்கு காலம் பிடிப்பதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

901 பேரணி பங்கேற்பாளர்களுடன் வெடிப்புச் சம்பவங்களை தொடர்புபடுத்தித் தகவல் வெளியாகி இருப்பது இதுவே முதன் முறையாகும். இன்றைய தேதி வரை வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கக் கூடியவர்களுடைய அடையாளத்தை எந்தப் போலீஸ் அதிகாரியும் பகிரங்கமாக வெளியிடவில்லை.

அன்வார் இப்ராஹிமை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து உயர் நீதிமன்றம் விடுவித்த பின்னர் ஜாலான் டூத்தாவில் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் நிகழ்ந்த மூன்று வெடிப்புச் சம்பவங்களில் ஐவர் காயமடைந்தனர்.