இராகவன் கருப்பையா- நம் நாட்டில் அண்மையில் நிகழ்ந்த மிகக் கோரமான 2 சாலை விபத்துகள் நம் அனைவரையும் அதிக சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த மாதம் 13ஆம் தேதி பேராக், தெலுக் இந்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் காவல்துறை சேமப் படையைச் சேர்ந்த 9 பேர்களும் இம்மாதம் 9ஆம் தேதி கெரிக் அருகே உயர் கல்வி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர்களும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவங்கள் நாட்டை உலுக்கியது.
இவ்விரு விபத்துகள் தொடர்பாகவும் அரசாங்கத் தரப்பு மட்டுமின்றி தனியார் துறையைச் சேர்ந்த பல சாலை பாதுகாப்பு வல்லுநர்களும் கருத்துரைத்துவிட்டு தற்போது அமைதியாகிவிட்டார்கள்.
சற்றுத் திரும்பிப் பார்ப்போமேயானால் இதுதான் காலங்காலமாக நம் நாட்டில் நிலவுகிறது. அதாவது, அமைச்சர்கள், சாலை போக்குவரத்துத் தொடர்பான பொறியியலாளர்கள், மற்றும் பலரும், ‘நானும் பேசிவிட்டேன்,’ எனும் நிலைப்பாட்டில் பிறகு அவரவர் வேலைகளை கவனிக்கச் சென்றுவிடுவார்கள்.
மற்றொரு பயங்கர சாலை விபத்து நிகழும் போதுதான் இவர்கள் அனைவரும் ‘ஞானம்’ பெற்றதைப் போல’ மீண்டெழுந்து வந்து தங்களை அடையாளம் காட்டிக் கொள்வார்கள்.
குறிப்பாக ஜே.பி.ஜே.(JPJ) எனும் சாலை போக்குவரத்து இலாகாவும் காவல்துறையினரும் சாலை பாதுகாப்பு மீதான சட்ட அமலாக்கத்தில் மெத்தனப் போக்கை கைவிட வேண்டும்.
சட்டவிதிகள் ஆக்ககரமாக அமலாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். குளறுபடிகளுக்கு இடமளிக்கக் கூடாது.
ஒவ்வொரு முறையும் ஒரு பயங்கர சாலை விபத்து நிகழ்த்த பிறகுதான் சம்பந்தப்பட்ட அந்த வாகனம் மீதும் அதனை செலுத்தியவர் மீதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வாகனம் மீதும் ஓட்டுனர் மீதும் எத்தனை குற்றப் பதிவுகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன என்று அறிவிப்பது, ‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ போல்தான்.
கெரிக் விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்துக்கு 21 குற்றப் பதிவுகளும் அதனை செலுத்திய ஓட்டுநருக்கு எதிராக 18 குற்றப்பதிவுகளும் செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது நமக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீதும் வாகன நிறுவனங்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டால் இத்தகைய அறிவிப்புகளுக்கு அவசியம் இருக்காது, சாலை பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இருக்கும்.
சட்ட அமலாக்கத்தில் குளறுபடிகள் இருப்பதால்தான் பேருந்து மற்றும் சுமையுந்து நிறுவனங்களும் அவற்றின் ஒட்டுநர்களும் மிகத் துணிச்சலாக விதிமுறைகளை மீறுகின்றனர்.
இன்றும் கூட சுமையுந்துகளும் பேருந்துகளும் சாலைகளில் வரம்பு மீறி அதிவேகத்தில் செலுத்தப்படுவதை நாம் காணலாம். நான்கு வாரங்களில் மொத்தம் 24 பேர்களை பலிகொண்ட இரு விபத்துகளும் அவர்களுக்கு எவ்வித விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் பிடிபட்டால் எப்படியாவது ‘செட்டல்’ செய்துவிடலாம் எனும் தைரியத்தில்தான் அவர்கள் விதிகளைக் கடந்து குற்றம் புரிகின்றனர் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.
தனியார் துறையைச் சேர்ந்த வாகனங்கள் மட்டுமின்றி அரசாங்க வாகனங்களும் கூட இப்படி சாலை விதிகளை அப்பட்டமாக மீறுவது நமக்கு ஆச்சரியமாகவே உள்ளது.
குறிப்பாக சில அரசாங்க இலாகாக்களுக்குச் சொந்தமான பேருந்துகள், அரசு பல்கலைக்கழக பேருந்துகள் மற்றும் நகராண்மைக் கழகங்களைச் சேர்ந்த பேருந்துகளும் கூட முரட்டுத்தனமாக செலுத்தப்படுவதை நம்மால் காண முடியும்.
ஆக யாராக இருந்தாலும் குற்றம் புரிவோர் மீது பாரபட்சமின்றி உடனுக்குடன் சட்டம் முறையாக பாய்ந்தாலே ஒழிய இது போன்ற அசம்பாவிதங்கள் ஒரு தொடர்கதையாக இருப்பதைத் தவிர்க்க இயலாது.