நீக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்யுங்கள் என ஹரோன் டின், ஹசானுக்கு அறிவுரை

முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு செய்து கொள்ள வேண்டும் என பாஸ் துணை ஆன்மீகத் தலைவர் ஹரோன் டின் யோசனை கூறியிருக்கிறார். ஹரோன், ஹசானுக்கு அணுக்கமானவர் என்று கூறப்படுகிறது.

“பாஸ் கட்சியில் தொடர்ந்து இருப்பதற்கு ஹசானுக்கு இன்னும் வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது,” என அவர் சொன்னதாக மலாய் நாளேடான சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் தலைமை தாங்கும் syura மன்றத்தில் ஹரோன் துணைத் தலைவரும் ஆவார்.

பாஸ் கட்சியில் முடிவுகளை எடுக்கும் உச்ச அமைப்பு அந்த மன்றமாகும்.

ஹசான் முறையீடு செய்து கொண்டால் அது அதனை விசாரிக்கும்.

முன்னாள் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசாவும் உலாமா தலைவர் ஹருண் தாயிப்பும்  syura மன்றத்தில் அங்கம் பெற்றுள்ளனர்.

தலைவர் அப்துல் ஹாடி அவாங் தலைமையிலான கட்சித் தலைமைத்துவத்துடன் ஹசானுக்கு ஏற்பட்டுள்ள தகராற்றில் அந்த மூவரும் ஹசானை ஆதரிப்பதாகத் தெரிகிறது.

ஹசானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை ஆதரிப்பதாக கூறப்படும் ஹாடியும் நிக் அஜிஸும் ஹசான் முறையீட்டை செவிமடுப்பதிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். காரணம் ஹசானை நீக்க முடிவு செய்த மத்தியக் குழுவில் அவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவிக்கும் மத்தியக் குழு கடிதம் கிடைத்தவுடன் ஹசான் தமது முறையீட்டைச் சமர்பிக்கலாம் என்றும் ஹரோன் கூறியதாகவும் சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஹசான் முறையீடு செய்து கொள்ள வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்,” எனக் கூறிய அவர் syura மன்றம் வழியாக ஹசான் தம்மைத் தற்காத்துக் கொள்ளலாம் என்றார்.

உறுப்பினர்கள் அறிக்கைகளை வெளியிடும் போது மிகவும் விவேகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஹசான் நீக்கம் அனைத்து உறுப்பினர்களுக்கும் உணர்த்த வேண்டும் என அந்த முதுநிலை சமய அறிஞர் கூறினார்.

“நாம் நமது கருத்துக்களை வெளியிடக் கூடாது என்பதல்ல. நாம் கட்சிக்கு எதிராகப் போகக் கூடாது.”

“அது சிறியதாக இருந்தால் மன்னித்து விடலாம். ஆனால் அது கட்சியையே பாதிக்கும் என்றால் எச்சரிக்கையோ தண்டனையோ இருக்காது. நேரடியாக நீக்கப்படுவர். அத்தகைய நடவடிக்கைகள் கட்சிக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதே அதற்குக் காரணம்.”

கட்சித் தலைமைத்துவத்தையும் கொள்கைகளையும் வெளிப்படையாக குறை கூறியதற்காக மத்தியக் குழு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹசானை மத்தியக் குழு கட்சியிலிருந்து நீக்கியது.
 
குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவு வழங்கத் தாம் மறுத்து விட்டதே கட்சியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்காக காரணம் என ஹசான் கூறியுள்ளார்.

அவ்வாறு ஆதரிப்பது கட்சியின் நிலைக்கு முரணானது என ஹசான் குறிப்பிட்டார்.