போலீஸ் அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்வதற்கு இடையூறாக இருந்ததாக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 22 வயது மலாயாப் பல்கலைக்கழக மாணவர் போராளி ஒருவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
ஜனவரி மாதம் ஆறாம் தேதி இரவு மணி 11.35 வாக்கில் ஜாலான் பந்தாய் பாருவில் உள்ள அர் ரஹ்மான் பள்ளிவாசலில் போலீஸ் அதிகாரியான ரோஹைஸாட் அக்பார் ராம்லி-யிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதின் மூலம் அவருக்கு இடையூறாக இருந்ததாக இஸ்லாமியக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரான முகமட் புகைரி முகமட் சபியான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மலாயாப் பல்கலைக்கழக மாணவர் மன்றத்தின் துணைச் செயலாளருமான புகைரி-யைப் பிரதிநிதித்து வழக்குரைஞர் பர்ஹானா அப்துல் ஹலிம் ஆஜரானார்.
6,000 ரிங்கிட் ஜாமீனை நிர்ணயிக்குமாறு அரசு தரப்பு வழக்குரைஞரான டிபிபி தான் சியூ பெங் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். ஆனால் புகைரி ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது தந்தை காலமாகி விட்டர் என்றும் பர்ஹானா வாதாடினார்.
“அத்துடன் அவர் நாளையும் அடுத்த வாரமும் தேர்வு எழுத வேண்டியுள்ளது. அதிகமான ஜாமீன் தொகை அவரை தேர்வு எழுத விடாமல் தடுக்கக் கூடும்,” என்றும் அவர் சொன்னார்.
“ஜாமீன் என்பது நீதிமன்றத்துக்கு வருவதை உறுதி செய்வதற்காகும். அது குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சுமையாக இருக்கக் கூடாது. மேலும் இது அவரது முதல் குற்றமாகும்,” என்றார் பர்ஹானா.
மாஜிஸ்திரேட் பார்வின் ஹமீடா நாட்சியார், ஒரு நபர் உத்தரவாதத்துடன் ஈராயிரம் ரிங்கிட் ஜாமீனை நிர்ணயம் செய்தார். அந்த வழக்கு மீண்டும் தாக்கல் செய்யப்படுவதற்கு பிப்ரவரி 16ம் தேதியையும் அவர் நிர்ணயம் செய்தார்.