இராகவன் கருப்பையா – ஒரு காலக்கட்டத்தில் நம் நாடு இயற்கை வளங்கள் நிறைந்த, செல்வம் செழிக்கும் தேசமாக இருந்தது நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
எனினும் நடப்பு சூழலில் கிட்டதட்ட எல்லா தொழில்துறைகளிலும் நாம் சரிவு கண்டுள்ளதற்கு அரசியல்வாதிகளின் குறுகிய மனப்பான்மையும் அவர்களின் இனவாத கொள்கைகளும்தான் காரணம் என்றால் அது மிகையில்லை. புதிய பொருளாதார கொள்கையின் வழி சமூக ஏற்றத்தாழ்வுகளை சீரமைக்க இயலும் என்பதுக்கு மலேசியா ஒரு முன்னுதாரணம். ஆனால் அதுவே தடம் புரண்டு நமது வாணிப வளர்சிக்கு தடையாகியது வரலாறு.
கடந்த 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டிற்கு ஈயம் மற்றும் ரப்பர் ஏற்றுமதியில் மலேசியாதான் முதலிடம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
பிறகு சன்னம் சன்னமாக இச்சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டின் கவனம் செம்பனை உற்பத்தியில் வேரூன்றிடியதும் நாம் அறிந்ததே.
உலகின் முதன்மை செம்பனை ஏற்றுமதி நாடுகளில் இந்தோனேசியாவுக்கு அடுத்து மலேசியா 2ஆம் நிலையில் உள்ள போதிலும், அதிலும் கூட தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.
மலேசிய செம்பனையின் ஆகப் பெரிய இறக்குமதி நாடு இந்தியாவாகும். ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு பிற்பகுதியில் அப்போதைய பிரதமர் மகாதீர் செய்த ஒரு குழப்படி இந்தியாவை சினமடையச் செய்து அந்நாட்டுக்கான செம்பனை ஏற்றுமதியை குறைத்தது உலகறியும்.
தேவையில்லாமல் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்த மகாதீர், காஷ்மீர் விவகாரத்தில் அந்நாடு செய்த சில முடிவுகளைத் தாக்கிப் பேசினார்.
அதனால் கடுமையான கோபத்திற்குள்ளான இந்திய அரசாங்கம், மலேசியாவிடமிருந்து செம்பனை இறக்குமதியை உடனே நிறுத்துமாறு தனது இறக்குமதியாளர்களை பணித்தது.
அது மட்டுமின்றி பொதுவாக செம்பனை எண்ணெய்க்கு எதிராக ஐரோப்பாவில் உள்ள பேரங்காடிகள் மேற்கொண்ட பிரச்சாரங்களும் அதன் விலையை கிட்டதட்ட பாதியாகக் குறைத்ததைத் தொடர்ந்து நமது ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
இந்தோனேசியா இலக்கவியல் நடைமுறையை பயன்படுத்தி தனது ஏற்றுமதியை வெற்றிகரமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், மலேசியா இன்னமும் பல துறைகளில் இன ஒதுக்கீட்டு நடைமுறைகளில் உழன்று கொண்டிருக்கிறது.
ரப்பர் உற்பத்தியை பொருத்தவரையில் தாய்லாந்தும் வியட்நாமும் மலேசிய உற்பத்தியை முடக்கிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
ரப்பர் மரங்களை நடும் தொழில்நுட்பத்தில் அவ்விரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதால் மலேசியா அந்நாடுகளுடனான போட்டித் தன்மையை இழந்தது.
வியட்நாம் தனது ரப்பர் உற்பத்தியை பெருக்குவதற்கு ‘ரோபோ’க்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. ஆனால் மலேசியா 1940களில் பயன்படுத்திய அதே நுட்பங்களைத்தான் இன்னுமும் நம்பியிருக்கிறது.
ஈய உற்பத்திக்கான செலவுகள் கணிசமான அளவு உயர்ந்ததாலும் உலகச் சந்தையில் அதன் விலை படு வீழ்ச்சியடைந்ததாலும் அதன் ஏற்றுமதி மிகவும் குறைந்துவிட்டது.
ஒரு காலக்கட்டத்தில் மில்லியன் கணக்கானோரை வேலைக்கு அமர்த்தி கொடி கட்டிப் பறந்த மின்னியல் உற்பத்தித் தொழில்சாலைகளும் பெருமளவில் மூடுவிழாக் கண்டன.
நிர்வாகத்தில் அரசியல் தலையீடு மற்றும் ஊழியர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளினால் அத்தொழில்சாலைகள் வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, ஃபிலிப்பீன்ஸ், சீனா, போன்ற நாடுகளுக்கு இடமாற்றம் கண்டன.
மொத்தத்தில், இந்தத் தொழில்துறைகள் யாவும் இயற்கையான வீழ்ச்சியைக் காணவில்லை. மாறாக, செயல்முறையில் நவீன தொழில்நுட்ப வளர்சியைத் தழுவத் தவறியதாலும் அரசியல்வாதிகளின் குறுகிய சிந்தனையுடைய கொள்கைகளாலும் அவை குழி தோண்டி புதைக்கப்பட்டன என்றே சொல்ல வேண்டும்.