13வது பொதுத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கலாம் என்றும் அது அமலாக்கப்பட வேண்டும் என்றும் தேசிய பாத்வா குழு முடிவு செய்துள்ளது.
அந்த மை மாசு இல்லாதது, ஆபத்து இல்லாதது, ஊடுருவத்தக்கது என்ற மூன்று வகைகளின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாத்வா குழுத் தலைவர் அப்துல் ஷுக்கோர் ஹுசின் கூறினார்.
“அந்த மை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தினால் அது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும். அதனால் அவர்கள் தொழுகைகளை நடத்துவதற்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படாது,” என்றும் அவர் சொன்னார்.
அவர் அதற்கு முன்னதாக கோலாலம்பூரில் இன்று அந்தக் குழுவின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
ஜாக்கிம் என்ற மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையில் நிகழ்ந்த அந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையம், இரசாயனத் துறை, சுகாதார அமைச்சு ஆகியவற்றின் பேராளர்களும் முப்திகளும் கலந்து கொண்டார்கள்.
13வது பொதுத் தேர்தலில் ‘சில்வர் நைட்டிரேட்’ அழியா மை பயன்படுத்தப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பெர்னாமா