பாஸ் கட்சியிலிருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை நீக்கப்பட்ட சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி இன்று நடைபெற்ற ஆட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அவரது ஆட்சி மன்ற சகாவான ரோனி லியூ கூறியிருக்கிறார்.
ஹசான் தற்போது “விடுமுறையில்” இருக்கிறார் என்றும் அவர் இன்னும் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றப்படவில்லை என்றும் லியூ இன்று பிற்பகல் ஆட்சி மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
ஹசானை பாஸ் நீக்கியது பற்றி ஆட்சி மன்றம் ‘இன்னும்’ விவாதிக்கவில்லை என்று கூறிய அவர் ஹசான் எத்தனை நாட்களுக்கு விடுமுறையில் இருப்பார் என்பது உட்பட மேல் விவரங்களைத் தர மறுத்து விட்டார்.
“மந்திரி புசாருடைய விளக்கத்துக்காக காத்திருங்கள்,” என லியூ மேலும் சொன்னார். ஆட்சி மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களைச் சந்தித்த நான்கு ஆட்சி மன்ற உறுப்பினர்களில் லியூவும் ஒருவர் ஆவார்.
இஸ்காண்டார் சாமாட், ஹலிமா அலி, யாக்கோப் சபாரி ஆகியோர் மற்ற மூவர் ஆவர். அவர்களும் ஹசானைப் பற்றி எதுவும் கூற மறுத்து விட்டனர்.
ஹசானுக்கு பதிலாக பொறுப்பேற்பவர் குறித்து பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிடமிருந்து உத்தரவுக்காக சிலாங்கூர் பாஸ் காத்திருப்பதாக இஸ்காண்டார் சொன்னார்.
“நாங்கள் தலைவருக்காக காத்திருக்கிறோம். நாங்கள் அவரை முந்திக் கொண்டு எதுவும் சொல்லக் கூடாது,” என்றார் அவர்.
நேற்றிரவு முதல் ஹசானுடைய கருத்துக்களைப் பெறுவதற்காக அவருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. ஹசான் அடுத்த ஒரிரு நாட்களில் நிருபர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் சுல்தான், நடப்பு விவகாரங்கள் பற்றியும் ஹசானுக்கு பதில் நியமிக்கப்படுகின்றவர் பற்றியும் விவாதிப்பதற்காக நாளை மந்திரி புசார் காலித் இப்ராஹிமுக்குப் பேட்டி அளிக்கிறார்.