ஆகஸ்ட் 13ம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நிகழ்ந்த நிதி திரட்டும் விருந்தில் கலந்து கொண்ட 12 முஸ்லிம்களில் ஒருவர், தாம் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறியதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். அந்தத் தகவலை முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் வெளியிட்டுள்ளார்.
மற்றவர்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறியதை அந்த மாது ஒப்புக் கொண்ட போதிலும் தாம் இஸ்லாம் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் சொன்னார்.
அந்த மத மாற்றங்களுக்கு வசதி குறைந்த முஸ்லிம்களுக்கு உதவி செய்ய இந்த நாட்டின் இஸ்லாமிய அமைப்புக்கள் தவறி விட்டதே காரணம் என அவர் சொன்னார்.”
“அந்த மாது தனித்து வாழும் தாய் ஆவார். கணவர் அவரை விட்டுச் சென்று விட்டார். அவர் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலை. தாம் தங்கியுள்ள வீட்டுக்கு அவரால் வாடகை கொடுக்க முடியவில்லை. அவர் உதவி நாடி இஸ்லாமிய அதிகாரிகளிடம் சென்றுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை.”
“அரசியல்வாதி ஒருவருடைய ஆதரவுக் கடிதம் கிடைத்த பின்னரே அவருக்கு ஸாக்காட் உதவி தரப்பட்டது. சமூக நலத் துறையும் அவருக்கு உதவி செய்யவில்லை,” என்றார் அஸ்ரி.
தமது கிறிஸ்துவ நண்பர் ஒருவர் உதவியை நாடுவதற்கு பரிந்துரை செய்தார் என்றும் அதனைத் தொடர்ந்து தேவாலயத்துடன் தமக்குத் தொடர்பு ஏற்பட்டது என்றும் அந்த மாது குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் அவர் எந்தத் தேவாலயம் என்பதை அந்த மாது கூறவில்லை.
“சகோதர முஸ்லிம்கள் அவரைக் கவனிக்காததோடு உதவி செய்யவும் மறுக்கும் போது அவர் எப்படி இஸ்லாத்தின் பெருமையை உணர முடியும்..? அவரது குழந்தைகள் நோய்வாய்ப்படும் போது தேவாலயம் கவனித்துக் கொள்கிறது. அவருடைய வாழ்வாதாரத்துக்கு தேவாலயம் ஆதரவு அளிக்கிறது. அவருடைய அன்றாடத் தேவைகளைக் கூட அது வழங்குகிறது,” என அஸ்ரி வருத்தத்துடன் கூறினார்.
அந்த மாதுவை இஸ்லாமிய அதிகாரிகள் கைது செய்தது டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்து முதலாவது நிகழ்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஸக்காத் துறை, பாலர் பள்ளி ஒன்றை அவர் திறப்பதற்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் அது கிடைக்காததால் தேவாலயம் மீண்டும் தலையிட்டு வாடகையைச் செலுத்துவதற்கு உதவியது.
அது போன்ற நிலையில் உள்ள வசதி குறைந்த பல முஸ்லிம்கள் முஸ்லிம் சமூகம் கருணை காட்டாததால் ஏமாற்றமடைந்து தேவாலயத்தின் நல்லெண்ணத்தால் கவரப்பட்டு, கட்டாயப்படுத்தப்படா விட்டாலும் மதம் மாறியிருக்கின்றனர் எனக் கூறப்படுவதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அஸ்ரி சொன்னார்.
ஏழை முஸ்லிம்களுக்கு இன்னும் அதிகமாக உதவுங்கள்
கிறிஸ்துவர்களையும் தேவாலயங்களையும் குறை கூறுவதற்குப் பதில் நடப்பு சூழ்நிலைக்கு முஸ்லிம்கள் பொறுப்பேற்க வேண்டும் அந்த முன்னாள் முப்தி கேட்டுக் கொண்டார்.
இஸ்லாமிய அதிகாரிகளின் நல்ல பணிகளை அங்கீகரித்த அவர், ஏழை முஸ்லிம்களைக் கண்டு பிடித்து அதிகம் உதவி செய்யுமாறு அவர்களை அஸ்ரி கேட்டுக் கொண்டார்.
“ஸாக்காட் முறை நன்றாக இயங்கினால் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இஸ்லாத்தினால் கவரப்படுவார்கள். ஸாக்காட் முறை நன்றாக இல்லை என்றால் முஸ்லிம்கள் கூட சமயத்திலிருந்து வெளியேறி விடுவர்,” என அவர் சொன்னார்.