என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் இந்த வாரம் மறுசீரமைப்புச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் சொத்துக்களை முடக்குமாறு பிகேஆர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு மறுசீரமைப்புச் செய்யப்பட்டால் அந்த நிறுவனம் மீதான போலீஸ் புலனாய்வுகள் பாதிக்கப்படும் என அது கருதுகிறது.
இந்த வாரத்தில் அவசரப் பொதுக் கூட்டத்தையும் (இஜிஎம்) வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தையும் என்எப்சி நடத்தவுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கூறினார்.
மிகவும் குறுகிய காலத்தில் அதுவும் மூன்று நாள் நோட்டீஸில் இஜிஎம் ஏற்பாடு செய்யப்படுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏதோ ஒரு மாற்றம் நிகழப் போகிறது என்பதற்கான அறிகுறி அது என்றும் ராபிஸி சொன்னார்.
“மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷரிஸாட் அப்துல் ஜாலிலிக்கு சொந்தமான என்எல்எம் சி ( National Meat and Livestock Corporation) நிறுவனத்தை கையகப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எனக்குத் தெரிய வந்துள்ளது.”
என்எப்சி, நிதி அமைச்சுக்குச் சொந்தமான சிறப்புப் பங்கு மூலம் உருவாக்கப்பட்ட அரசு தொடர்புடைய நிறுவனம் ஆகும்.
“என்எப்சி இயக்குநர்கள் வாரியக் கூட்டத்தையும் இஜிஎம்-மையும் அவசரமாகக் கூட்டுவது, தவறான நோக்கத்தைக் கொண்டுள்ளதாக நான் நம்புகிறேன். அத்துடன் அது அதிகாரிகள் இப்போது மேற்கொண்டு வருகின்ற விசாரணைகளுக்கும் குந்தகத்தை ஏற்படுத்தும்,” என்றார் அவர்.
நிதி அமைச்சருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மெத்தனமாக இருக்கக் கூடாது என்றும் மலேசிய அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பயன்படுத்துவதிலிருந்து அந்த நிறுவனத்தைத் தடுப்பதற்கு அதன் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்றும் தாங்கள் விரும்புவதாக ராபிஸி சொன்னார்.
என்எப்சி கேள்விக்குரிய பல நடைமுறைகளைப் பின்பற்றியிருப்பதால் அதனை நடத்துவதற்குச் சிறப்பு நிர்வாகிகளை நியமிப்பதே நஜிப் எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராபிஸி நிருபர்களைச் சந்தித்த போது பிகேஆர் கட்சியின் முதலீட்டு வர்த்தகப் பிரிவின் தலைவர் வோங் சென்-னும் உடனிருந்தார்.