திங்கட்கிழமையன்று குதப்புணர்ச்சி வழக்கு IIல் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் மூன்று இடங்களில் வெடி பொருட்களை வெடிக்கச் செய்த குற்றவாளிகளின் அடையாளம் குறித்து ஆரூடங்களைத் தெரிவிக்க வேண்டாம் என போலீஸ் இன்று பொது மக்களை எச்சரித்துள்ளது.
நேற்று உத்துசான் மலேசியாவில் முதல் பக்கத்தில் வெளியான செய்தி பற்றிய கேள்விகளை புறம் தள்ளிய கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே அந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அந்த வெடி மருந்துகளை “901 அன்வார் விடுதலை” பேரணிப் பங்கேற்பாளர்கள் கொண்டு வந்ததாக போலீஸ் வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி அம்னோவுக்கு சொந்தமான அந்த நாளேடு தகவல் வெளியிட்டிருந்தது.
உத்துசான் செய்தி குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்ட போது “அது வெறும் ஊகமே” என்றார் அவர்.
“அத்தகைய செய்திகளைப் பரப்ப வேண்டாம் என நான் பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். காரணம் அவை பதற்றத்தை ஏற்படுத்தி விடக் கூடும்,” என அவர் சொன்னார்.
காலஞ்சென்ற போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் உதவிகளை வழங்கிய பின்னர் முகமட் நிருபர்களிடம் பேசினார்.
1957ம் ஆண்டுக்கான வெடி மருந்துச் சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் அந்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
சந்தேகத்துக்குரிய நபர் கண்டு பிடிக்கப்படும் வரையில் “அந்த வெடி பொருட்கள்” வைக்கப்பட்டதற்கான காரணத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்றும் முகமட் குறிப்பிட்டார்.
“அன்றைய தினம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே அங்கு வெடி மருந்துகள் வைக்கப்பட்டதாக நாங்கள் பொதுவாக நம்புகிறோம்,” என அவர் சொன்னார்.
ஜாலாப் டூத்தாவில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகப் பகுதியில் நிகழ்ந்த மூன்று வெடிப்புச் சம்பவங்களில் நால்வர் காயமடைந்தனர். எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவை நிகழ்ந்தன.
அந்தப் பகுதியை “நன்கு அறிந்த ஒருவர்” அந்த மூன்று வெடி பொருட்களையும் வைத்திருக்க வேண்டும் என முகமட் குறிப்பிட்டார்.
“நாங்கள் அந்த விவகாரத்தைத் தீர்க்க முயலுகிறோம். அது எங்களுக்கு முதலாவது விஷயமாகும். நம் நாட்டில் ஆரோக்கியமற்ற போக்கு தலைதூக்கி இருப்பதை அது உணர்த்துகிறது”, என்றும் முகமட் சொன்னார்.
மூன்று அலாரக் கடிகாரங்கள், மூன்று பிவிசி குழாய்கள், மூன்று 9 வோல்ட் பேட்டரிகள் ஆகியவை அந்த வெடி பொருட்களில் அடங்கியிருந்தன. மற்ற பொருட்களில் மூன்று சாலை கூர் உருளைகளும் அடங்கும் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் தெரிவித்தார்.
“அலாரக் கடிகாரங்கள் சாதாரணமானவை என்பதை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். அந்தக் கடிகாரங்கள் சிவப்பு உறையில் வைக்கப்பட்டிருந்தன.”
சாலை கூர் உருளைகள், போக்குவரத்துக் கூர் உருளைக் காட்டிலும் மாறுபட்டவை என்பதையும் குழாய்கள் சாதாரணமானவை என்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் கூ சின் வா கூறினார்.
அந்தச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் எஞ்சியவற்றை கூ, ஊடக உறுப்பினர்களுக்குக் காண்பித்தார். வெடி பொருட்களை மறைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உருளைகளின் அடிப்பகுதி சதுரமாக இருப்பதாக அவர் சொன்னார். போலீஸ் பயன்படுத்தும் உருளையின் அடிப்பகுதி முக்கோண வடிவிலானது.
அந்த உருளைகள் பருமனிலும் தரத்திலும் மாறுபட்டிருந்ததாகவும் கூ விளக்கினார். போலீஸ் பயன்படுத்தும் உருளையின் அகலம் 7 மில்லி மீட்டர் ஆகும். வெடி பொருட்களில் பயன்படுத்தப்பட்டதின் அகலம் மூன்று மில்லி மீட்டர் என்றார் அவர்.
“அந்த உருளைகள் சாலை ஒரங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது கட்டுமானத் தளங்களிலிருந்து திருடப்பட்டிருக்கலாம்,” என்றார் கூ.
திங்கட்கிழமை நிகழ்ந்த அந்த வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் எந்த ஒரு துப்பும் போலீஸுக்கு இன்னும் கிடைக்காததால் அது குறித்து அறிந்தவர்கள் தகவல் கொடுக்க வேண்டும் என முகமட்-டும் கூ-வும் கேட்டுக் கொண்டனர். இ.
அந்த வெடி பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்ற கடை உரிமையாளர்களுடைய உதவியையும் கூ நாடினார்.
“ஊகங்களைப் பரப்ப்புவதை நிறுத்திக் கொண்டு எங்கள் என்ன தகவல் கொடுக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்,”என்றும் கூ கேட்டுக் கொண்டார்.