என்எப்சி மீதான விசாரணையை ஒட்டி ஷாரிஸாட் விடுமுறைக்கு விண்ணப்பிக்கிறார்

மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் என்னும் முறையில் தாம் நாளை தொடக்கம் மூன்று வாரங்களுக்கு விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஷாரிஸாட் அப்துல் ஜலில் இன்று அறிவித்துள்ளார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் தமது விடுமுறை விண்ணப்பத்தைச் சமர்பித்துள்ளதாக அவர் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“என் கணவர் முகமட் சாலே இஸ்மாயில் நிர்வாகத் தலைவராக இருக்கும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் மீது அரசாங்கம் எடுத்த எந்த முடிவுகளிலும் நான் சம்பந்தப்பட்டுள்ளேனா இல்லையா என்பதை உறுதி செய்வதற்கான விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொள்ள இயலும் என நான் நம்புகிறேன்”, என்றார் அவர்.

கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் என்எப்சி விவகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. உள் நாட்டில் மாட்டிறைச்சி உற்பத்தியைப் பெருக்கி, இறக்குமதியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு நெகிரி செம்பிலான் கெமாஸில் அமைக்கப்பட்ட என்எப்சி தனது இலக்கை அடையத் தவறி விட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அந்த என்எப்சி திட்டத்துக்கு அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அந்த விவகாரம் சூடு பிடித்தது.

TAGS: