இண்டர்லாக்கை மீட்டுக் கொள்வது குறித்த உத்தரவு 80 பள்ளிக்கூடங்களுக்கு கிடைக்கவில்லை

இண்டர்லாக் நாவலை மீட்டுக் கொள்வது என அமைச்சரவை கடந்த மாதம் முடிவு செய்த போதிலும் கடந்த ஆண்டு ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட அதனை மீட்பதற்கான உத்தரவு இன்னும் 80க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களுக்குக் கிடைக்கவில்லை.

நியாட் எனப்படும் தேசிய இண்டர்லாக் நடவடிக்கைக் குழுவின் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம் அந்தத் தகவலை இன்று வெளியிட்டார்.

தமது குழு தொலைபேசி வழி 100 இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் மேற்கொண்ட ஒர் ஆய்வில் மாணவர்களிடமிருந்து அந்தப் புத்தகத்தை மீட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும் மாவட்ட கல்வி அலுவலகங்களின் எழுத்துப்பூர்வமான உத்தரவு இன்னும் 80 மேற்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

ஆய்வுக்கு உட்பட்ட பள்ளிக்கூடங்கள் கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான் ஆகியவற்றை சேர்ந்தவை.

அவர் கோலாலம்பூர் சிலாங்கூர் அசெம்பிளி மண்டபத்தின் சிவில் சமூக உரிமைகள் குழுவின் துணைத் தலைவர் கியாவ் சாவ் யிங்-குடன் நிருபர்களைச் சந்தித்தார்.

அந்த விவகாரம் மீது பெற்றோர்களிடமிருந்து 600க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் தஸ்லீம் தெரிவித்தார்.

பள்ளிக்கூடங்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்துள்ளதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டனர். அவற்றுள் :

-மாவட்ட கல்வி அலுவலகங்களிடமிர்ருந்து அதிகாரப்பூர்வக் கடிதம் கிடைக்கவில்லை.
-கல்வி அமைச்சிடமிருந்து கொன்சார்ட்டோ தெர்அஹிர் (Konserto Terakhir) என்ற புதிய நாவல் கிடைக்கும் வரையில் இண்டர்லாக்கை வைத்திருக்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-வீட்டில் பொழுதுபோக்காக வாசிப்பதற்கு அந்த நாவலை வைத்துக் கொள்ளுமாறு மாணவர்களுக்குக் கூறப்பட்டது.
-எஸ்பிஎம் பாஹாசா மலேசியா வினாத் தாளில் அந்தப் புத்தகத்தின் அடிப்படையில் கேள்விகள் ஏதும் இருக்காது என்பதால் மாணவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

என்றாலும் கொன்சார்ட்டோ தெர்அஹிர் புத்தகத்தின் பிரதிகளை அமைச்சிடமிருந்து பெறுவதற்காக இன்னும் பல பள்ளிக்கூடங்கள் காத்திருப்பதாக தஸ்லீம் கூறினார்.

இவ்வாண்டு தொடக்கம் இண்டர்லாக்-கிற்கு பதில் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான மலாய் இலக்கிய பாடத்தின் ஒரு பகுதியாக தேசிய இலக்கியவாதியான எழுதிய கொன்சார்ட்டோ தெர்அஹிர் பயன்படுத்தப்படும் என்று டிசம்பர் மாதம் 21ம் தேதி கல்வி அமைச்சு அறிவித்தது.

நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், புத்ராஜெயா, சிலாங்கூர் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாவது மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் அந்த பாடப் புத்தகம் மாற்றப்படும் விவகாரத்தில் சம்பந்தப்படுவர் என்று கல்வித் துறை தலைமை இயக்குநர் அப்துல் காபார் மாஹ்முட் கூறியுள்ளார்.

TAGS: