அரசாங்கம் ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்களை நெருக்குகிறது

நில, சுரங்கத் துறை ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது- ஜனவரி 30ம் தேதிக்குள் எம்ஆர்டி நிறுவனத்துடன் உடன்பாடு காணுங்கள் அல்லது நிலத்தை இழக்க வேண்டி வரும் என்பதே அந்த எச்சரிக்கையாகும்.

ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் சுல்தான் பாதுகாப்புக் குழுத் தலைவர் யோங் இயூ வெய் அந்தத் தகவலை வெளியிட்டார்.

ஜனவரி 4ம் தேதியிடப்பட்ட அந்தக் கடிதம் நேற்றுதான் தமது அலுவலகத்துக்குக் கிடைத்ததாக  அவர் சொன்னார்.

யோங் நேற்றிரவு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு விளக்கமளித்தார்.

எம்ஆர்டி திட்டத்துக்காக ஜாலான் சுல்தான் நெடுகிலும் உள்ள நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு 1960ம் ஆண்டுக்கான நில ஆர்ஜிதச் சட்டத்தை நில சுரங்கத் துறை பயன்படுத்தப்படலாம் என அதன் தலைமை இயக்குநர் அஸெமி காசிம் அந்தக் கடிதத்தில் எச்சரித்துள்ளார்.

“இரு தரப்பு உடன்பாடு 2012ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதிக்குள் ஏற்படா விட்டால் அந்தத் துறை நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையைத் தொடங்கும்”, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்களுக்கு இது “சிறந்த சீனப் புத்தாண்டு அன்பளிப்பு” என அவர் வருணித்தார்.

எம்ஆர்டி திட்டத்தை ஆட்சேபிக்கும் வகையில் எல்லா கோலாலம்பூர் குடிமக்களும் கூட்டரசுப் பிரதேச நாளான பிப்ரவரி முதல் தேதி கறுப்புக் கொடியைப் பறக்க விடலாம்  கோம்பாக் கம்போங் பண்டா டாலாம் பேராளர் ஒருவர் கூறினார்.

அந்த யோசனைக்கு அங்கிருந்த அனைவரும் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர்.

அது குறித்துக் கருத்துரைத்த யோங், அது நல்ல யோசனை என்றும் கோலாலம்பூர் குடிமக்கள் எம்ஆர்டி திட்டம் மீது ங்களுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்த கறுப்பு நிற சட்டைகளையும் காலணிகளியும் கூட அணியலாம் எனத் தெரிவித்தார்.