பக்காத்தான் ராக்யாட் நாளை ( ஜனவரி 14 ) கெடா, அலோர் ஸ்டாரில் தனது மூன்றாவது மாநாட்டை நடத்துகிறது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முந்திய கடைசி பக்காத்தான் மாநாடாக அது இருக்கும் என கருதப்படுகிறது.
சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா அரங்கத்தில் காலை மணி 9.30 தொடக்கம் மாலை மணி 5.00 வரை நிகழும் அந்த மாநாட்டுக்கு டிஏபி, பாஸ், பிகேஆர் ஆகிய மூன்று தோழமைக் கட்சிகளும் மொத்தம் 600 பேராளர்களை அனுப்புகின்றனர். 200 பார்வையாளர்களும் பங்கு கொள்கின்றனர்.
ஜனவரி 9ம் தேதி குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வட மாநிலத்தில் கலந்து கொள்ளும் முதலாவது பொது நிகழ்ச்சியாக அந்த மாநாடு திகழும்.
பெர்மாத்தாங் பாவ் எம்பி-யுமான அன்வார் இன்றிரவு கோலாலம்பூர் கம்போங் பாருவில் தமது ஆதரவாளர்களிடையே உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் துருக்கிக்கும் மேற்கொண்ட குறுகிய காலப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இப்போது திரும்பியுள்ளார்.
அந்த மாநாட்டை ஒட்டி கெடாவில் உள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்றிரவு மணி ஏழு முதல் 11.30 வரையில் சொற்பொழிவுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
நாளை மாநாட்டில் கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பிகேஆர் தலைவர் வான் அஜிஸா வா இஸ்மாயில் ஆகியோர் காலை 9 மணி தொடக்கம் உரையாற்றுவர்.
பின்னர் மாநாட்டு நிறைவு விழாவில் பிற்பகல் மணி 3.40க்குப் பின்னர் கிளந்தான் மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட், டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆகியோருடன் அன்வாரும் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெர்சே தலைவர் எஸ் அம்பிகாவும் மற்றும் பல சிவில் சமூக தலைவர்களும் அந்த மாநாட்டில் காலை மணி 10.30 வாக்கில் பேசுவார்கள்.
அன்வார், அஜிஸான், டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் ஆகியோர் உட்பட மூத்த பக்காத்தான் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணியுடன் இரவு 11 மணிக்கு அந்த நிகழ்வு நிறைவு பெறும்.