கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் இனத்திற்கும் மொழிக்கும் சமயத்திற்கும் நிறைவாக வினையாற்றி பெருவாழ்வு வாழ்ந்து மறைந்த தோழர்கள் சின்னதம்பி கதிர்வேலு, தியாகச் செம்மல் தங்கராஜ் சங்கமரெட்டி, சின்னதம்பி ஆறுமுகம் ஆகியோரின் நினைவேந்தல் ஒன்றுகூடல் நிகழ்ச்சி கோலக்கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் 8.11.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. அப்பெருமகனார்களின் குடும்ப உறவுகள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமுதாய பற்றாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து; திருக்குறள் ஓதுதலுடன் தொடங்கிய நிகழ்ச்சி திருமுறை ஓதுதலுடன் இறையருளைப் பெற்றது. பின் தமிழ்வாழ்த்து பாடப்பெற்ற வேளையில்; மறைந்த பெருமகனார்களின் இணையர்கள் தங்கள் கணவரின் உருவப் படங்களுக்குத் தீபம் ஏற்றி வணங்கினர்.
வரவேற்புரையாற்றிய கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவர் பூவராசன் சிதம்பரநாதன்; தம் தந்தைக்கு உற்ற தோழமையாக விளங்கிய பெருமகனார் மூவரும் தம் வாழ்க்கை பயணத்தில் ஏற்படுத்திய நெகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பெருமகனார் மூவரும் நமக்களித்துச் சென்ற நீங்கா நினைவுகளின் பதிவுகள் காணொலி வடிவில் இடம்பெற்றது.
சிறப்புரை வழங்கிய கேசி ஃபோர்வடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இராமசந்திரன் அப்பண்ணன்; தன் நீண்டநாள் தோழர்களின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நினைவேந்தல் நிகழ்ச்சியில் முத்துகளாய் மூவர் என்ற தலைப்பிலான நினைவுமலரும் வெளியீடு கண்டது. நினைவுமலரினை இராமசந்திரன் அப்பண்ணன் மனித உரிமைக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பிணர்களின் இணைத்தலைவர், தோழர் சார்லஸ் சந்தியாகோ சார்காக வெளியீடு செய்த நிலையில்; முதல் நூலினை மறைந்த பெருமகனார்களின் இணையர்கள் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகையளித்திருந்த அன்பர்கள் சிலர்; பெருமகனார் மூவர் குறித்த தங்களின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தோழர் சின்னதம்பி ஆறுமுகத்தின் புதல்வன், திரு. பிரேம்குமரன் சின்னத்தம்பி மறைந்த பெருமகனார்களில் குடும்பங்களை நிகர்த்து நன்றியுரையாற்றிய வேளையில், மலர்வணக்கத்துடன் நினைவேந்தல் நிகழ்ச்சி நிறைவினைக் கண்டது.
தோழர் கே. சின்னத்தம்பி
தம்பி அல்லது தலைவர் என்று தனது நண்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் சின்னத்தம்பி கதிர்வேலு, 1948-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் நாள் திரு கதிர்வேலு-திருமதி கிளியம்மாள்ளின் இணையருக்குப் பந்தாங் பெர்ஜுந்தையில் பிறந்தார்.
ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தம்பி, தனது குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஒரே வழி கல்வி என்று உறுதியாக நம்பினார். அவர் தனது தொடக்கக் கல்வியை கோலக்கிள்ளான் மெதடிஸ்ட் ஆண்கள் பள்ளியில் பயின்ற வேளையில் இடைநிலைக்கல்வியைக் கிள்ளான் லா சால் இடைநிலைப்பள்ளியில் தொடர்ந்தார்.
தம்பி கப்பல், செயலணியியல் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி இறுதிவரை அதில் மிளிர்ந்தார். என்ஒய்கே (NYK) நிறுவனத்தின் மூத்த மேலாளராக பணி ஓய்வு பெற்றார்.
தம்பி 1983-இல் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தோற்றுநர்களில் ஒருவரானார். 1984 முதல் 1987 வரை அதன் இரண்டாவது தலைவராகவும் அவர் சேவையாற்றினார்.
அவர் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில் தமிழ் விழா, குடும்ப தத்தெடுப்புத் திட்டம், தகவல் தொழில்நுட்ப வகுப்புகள், கல்வி ஆதரவு வகுப்புகள், சமய வகுப்புகள், தொண்டன் செய்திமடல் வெளியீடு போன்ற உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தினார்.
1987 ஆம் ஆண்டு, தம்பி சிலாங்கூர் மாநில இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். 1987 தொடங்கி தனது இறுதி மூச்சு வரை; தம்பி கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஆலோசகராக அயரா பணியாற்றினார். இயக்கத்திற்கு நிதி திரட்டுவதில் அவர் முதன்மை பங்காற்றினார்.
கிள்ளானில் லக்ஷ்மி பூஜா தியான மன்றம், இந்திய வம்சாவளியினருக்கான உலகளாவிய அமைப்பு (GOPIO) மலேசியாவின் வாழ்நாள் உறுப்பினராகவும், மலேசிய இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் (MAIUG)-இன் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். திருக்குறள் மன்றத்தின் தீவிர உறுப்பினராகவும் இருந்தார். முன்னதாக, தெய்வீக வாழ்க்கை சங்கத்திலும் போர்ட் கிள்ளான் ஸ்ரீ சத்ய சாய் பாபா மையத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
அர்ப்பணிப்பு, பணிவு, இரக்க குணத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்த தோழர் தம்பி 2023 ஆகஸ்ட்டு 8-ஆம் நாள் நம்மை விட்டு பிரிந்தார்.
தியாகச் செம்மல் எஸ்.தங்கராஜ்
தமது நண்பர்களால் தங்கா என அன்புடன் அழைக்கப்பட்ட தியாகச் செம்மல் எஸ். தங்கராஜ், 1956 ஜனவரி 7-ஆம் நாள் மறைந்த திரு. சங்கம ரெட்டி – திருமதி இந்திராணி கந்தசாமி இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
அவர் தனது தொடக்கக் கல்வியைப் கோலக்கிள்ளான், மெதடிஸ்ட் ஆண்கள் பள்ளியில் பயின்றார். இடைநிலைக் கல்வியைப் கோலக்கிள்ளான் டத்தோ ஹம்சா இடைநிலைப்பள்ளியில் தொடர்ந்தார்.
உயர்கல்வியை நிறைவு செய்த பிறகு, தங்கா இளநிலை அலுவலக பணியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி, கிள்ளான் நகராண்மை கழகம் (MPK)-வின் மூத்த அலுவலக அதிகாரியாக ஓய்வு பெற்றார்.
அவர் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், கோலக்கிள்ளான் திருக்குறள் மன்றம், கோலக்கிள்ளான் தெய்வீக வாழ்க்கை சங்கம் ஆகியவற்றின் செயலூக்கமிக்க உறுப்பினராக இருந்தார். கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தில் அவரது வாழ்நாள் பணி போற்றுதலுக்குறியது. அவ்வமைப்பில் அவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அயரா சேவையாற்றினார்.
சமூகத்திற்கும் மனுக்குலத்திற்கும் அவர் ஆற்றிய அயரா சேவையையும் பங்களிப்புகளையும் போற்றும் விதமாக, தங்காவுக்கு 1997 மார்ச் 8-ஆம் நாள் சிலாங்கூர் ஆட்சியாளரின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, சிலாங்கூர் ஆட்சியாளரால் பிங்காட் ஜாசா கெபக்தியான் (PJK) பட்டம் வழங்கப்பட்டது.
ஆலோசகர், தலைவர், பொருளாளர் அல்லது மூத்த உறுப்பினராக இருந்தாலும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தில் தங்கா பல முனைப்புகளை வழிநடத்தி தீவிர பங்கேற்பை வெளிபடுத்தினார்.
கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் சகோதர அமைப்புகளான மலேசிய இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் (MAIUG), இந்திய வம்சாவளியினருக்கான உலகளாவிய அமைப்பு (GOPIO) ஆகியவற்றின் முக்கிய ஆதரவாளராகவும் அவர் விளங்கினார்.
அவரது அயரா அர்ப்பணிப்பு, சேவை, தியாகங்களைப் போற்றும் விதமாக, 2013-ஆம் ஆண்டு கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் 30-வது ஆண்டு விழாவின் போது தங்காவுக்கு “தியாகச் செம்மல்” விருது வழங்கப்பட்டது.
உயரிய தலைமைத்துவப் பண்பினைக் கொண்ட தோழர் தங்கா 2023 செப்டம்பர் 10-ஆம் நாள் நம்மை விட்டு பிரிந்தார்.
தோழர் சின்னத்தம்பி ஆறுமுகம்
சின்னா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் சின்னத்தம்பி ஆறுமுகம், திரு ஆறுமுகம் – திருமதி முனியம்மாள் இணையருக்குச் சிலாங்கூர், சுங்கை திங்கி தோட்டத்தில் பிறந்தவர்.
அவர் தனது தொடக்கக் கல்வியைச் சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார். இடைநிலைக் கல்வியைப் பத்தாங் பெர்ஜுந்தை ராஜா மூடா மூசா இடைநிலைப்பள்ளியில் தொடர்ந்தார்.
நுட்பத் துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சின்னா, நெகிரி தொழிநுட்ப கல்லூரியில் மின் பொறியியல் துறையில் பட்டயக் கல்வியைப் பெற்றார். 1984 ஆம் ஆண்டு ஆம்ஸ்டீல் (AMSTEEL) ஆலையில் (முன்பு எஎஸ்எம் (ASM) என்று அழைக்கப்பட்டது) ஒரு தொழில்நுட்ப வல்லுநராக தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார்.
கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும், பள்ளி மேலாளர் வாரிய பொருளாளராகவும் அவர் தனித்தன்மைமிக்க தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார். 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நான்கு மாடி இணைக்கட்டிடத்தை வெற்றிகரமாக கட்டி முடித்தது அவரது மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும்.
அப்பள்ளிக்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்கும் கூடுதலாக, மலேசிய தமிழ்ப்பள்ளி மேம்பாடு, முன்னேற்றக் கழகம் (PPST)-யின் இன் பொருளாளராகவும் அவர் செயல்பட்டார். மேலும், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் உறுதியான ஆதரவாளராகவும் தூணாகவும் இருந்தார். இந்த அமைப்புகளில் அவர் ஈடுபட்டதன் மூலம், பரந்தபட்ட சமூகத்திற்குப் பயனளிக்கும் புதிய பல நடவடிக்கைகளைத் தொடங்குவதிலும் ஆதரிப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
தோழர் சின்னா 2021 ஏப்ரல் 10-ஆம் நாள் காலமானார். சேவை, உயர்நெறி, இரக்கம் ஆகியவற்றைப் பேணும் பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
- தகவல் – குணா

























