1989ம் ஆண்டு தாம் ஏழு வயதாக இருந்த போது இஸ்லாத்துக்குத் தம்மை தவறாக மதம் மாற்றியதாக கூறுகின்றவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு தொழிற்சாலை ஊழியரான எஸ் பங்காரம்மாவுக்கு இறுதியில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
பினாங்கில் தாம் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் இருந்த போது தம்மை இஸ்லாத்துக்கு மதம் மாற்றியது செல்லாது என அறிவிக்குமாறு அவர் சமர்பித்த மூல விண்ணப்பத்தை விசாரிக்குமாறு முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றத்துக்கு ஆணையிட்டுள்ளதாக பங்காரம்மாவின் வழக்குரைஞர் கூய் சியாவ் லியூங் கூறினார்.
பங்காரம்மாவின் பெற்றோர்கள் அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அவரை ராமகிருஷ்ணா ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர். அங்கு அவர் ஒன்றை ஆண்டுகள் இருந்தார்.
பங்காரம்மாவின் தாயார் 1989ம் ஆண்டும் தந்தை 2004ம் ஆண்டும் காலமானார்கள்.
நீதிபதி அபு சாமா நோர்டின் தலைமையிலான மூவர் கொண்ட முறையீட்டு நீதிமன்றக் குழு ஏகமனதாக அந்த முடிவைச் செய்ததாக கூய் சொன்னார்.
பங்காரம்மா சமர்பித்த விண்ணப்பத்தை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கு நீதி அதிகாரம் இருப்பதாக அவர்கள் தீர்ப்பளித்தனர்,” என அவர் மலேசியாகினியிடம் சொன்னார்.
“பங்காரம்மா குழந்தையாக இருந்த போது தமக்கு என்ன நடக்கிறது என்பது புரியாத வேளையில் மதம் மாற்றப்பட்டிருப்பதால் அவரது சமய நிலை குறித்து பிரச்னைகள் இருப்பதாகத் தீர்ப்பளித்து அந்த வழக்கை அபு சாமா உயர் நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பினார்,” என்றும் கூய் சொன்னார்.
“நல்ல நீதிமன்ற முடிவு”
அந்த முடிவை மிகவும் ‘நல்ல முடிவு’ என வருணித்த கெடா பிகேஆர் மத்தியக் குழு உறுப்பினருமான கூய், ஒரு குழந்தையை இஸ்லாத்துக்கு மதம் மாற்றிய பிரதிவாதிகளுடைய நடவடிக்கைகளை நீதிமன்றம் ஆய்வு செய்ய அது வழி வகுத்துள்ளது என்றார்.
ஒருவர் இஸ்லாத்துக்கு மாறுவது வெறும் சடங்கு மட்டுமல்ல. ஒருவர் சத்தியப் பிரமாணமும் எடுத்துக் கொள்ள வேண்டும். சித்தி ஹஸ்னா வங்காரம்மா அப்துல்லா என்ற முஸ்லிம் பெயரைக் கொண்டுள்ள பஙகாரம்மா ஏழு வயதில் அதனைச் செய்ய முடியுமா என்னும் கேள்வியை அது எழுப்பியுள்ளது என்றும் அவர் சொன்னார்.