எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை நீதிமன்றம் விடுவித்துள்ளதைத் தொடர்ந்து தேர்தல் தேதி குறித்த ஊகங்கள் சூடு பிடித்து வரும் வேளையில் விரைவில் தாம் தேர்தலை நடத்த முடியும் எனத் ததம் நம்புவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.
என்றாலும் ஜனநாயகச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வதாக தாம் அண்மையில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரையில் தாம் பொதுத் தேர்தலை நடத்தப் போவதில்லை என டொவ் ஜோன்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு வசந்த காலத்துக்குள் நஜிப் தேர்தலை நடத்தியாக வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவருக்கு கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு முன்னர் அடுத்த சில மாதங்களில் நஜிப் தேர்தலை நடத்தக் கூடும் என்ற ஊகங்கள் இந்த வாரம் வலுவடைந்துள்ளன.
1988ம் ஆண்டு நிகழ்ந்த அதிகாரப் போராட்டத்தில் துணைப் பிரதமர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அன்வார், 1957ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றது முதல் மலேசியாவை ஆட்சி புரியும் கூட்டணியை அரசாங்கத்திலிருந்து அகற்றுவதற்கு பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்.
2008ம் ஆண்டு தமது இளம் உதவியாளரைக் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து அன்வார் விடுவிக்கப்பட்டார். அந்த வழக்கு அரசியல் அரங்கத்திலிருந்து தம்மை ஒழிக்கும் எண்ணம் கொண்டது என அன்வார் வருணித்து வந்துள்ளார். மலேசியாவில் குதப்புணர்ச்சிக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது.
“”விரைவில் சரியான நேரம் வரும் என நான் நம்புகிறேன். ஆனால் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்ற வேண்டும். நாங்கள் வாக்குறுதி அளித்த சீர்திருத்தங்கள் உண்மையில் தங்களுக்கு நன்மையைத் தரக் கூடியவை என்பதை மக்கள் உணருவது மிக முக்கியம்,” என நஜிப் சொன்னதாக டொவ் ஜோன்ஸ் குறிப்பிட்டது.
முதிர்ச்சியும் நவீன சிந்தனையும் பெற்று வரும் வாக்காளர்கள் கூடுதலான சிவில் சமூக உரிமைகளைக் கோருகின்றனர். ஆளும் கூட்டணியின் அதிகார அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டு வருமாறும் வாக்காளர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். அதன் விளைவாக பல ஜனநாயக சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வதாகக் கடந்த ஆண்டு நஜிப் உறுதி அளித்தார்.
விசாரணையின்றி தடுத்து வைக்க வகை செய்யும் காலனித்துவ ஆட்சிக் கால சட்டத்தையும் மற்ற சட்டங்களயும் அகற்றுவதும் அவற்றுள் அடங்கும். அந்தச் சட்டங்கள் அரசாங்க எதிர்ப்பாளர்களை முடக்கி வைப்பதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதாக கருதப்படுகின்றது.
மார்ச் மாதம் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது தாம் வாக்குறுதி அளித்த மாற்றுச் சட்டங்களை நஜிப் முன்மொழியத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகவே அவை அமலாக்கப்படும் வரையில் தேர்தல் நிகழாது என்பதையே அவரது பேட்டி உணர்த்துகிறது.
இதனிடையே நீதிமன்றம் விடுவித்ததைத் தொடர்ந்து புத்தெழுச்சி பெற்றுள்ள அன்வார், “இந்த ஊழல் அரசாங்கம் அதிகார பீடத்திலிருந்து அகற்றப்படுவதை உறுதி செய்வதற்கு” அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகளில் முழுக் கவனம் செலுத்தப் போவதாக சூளுரைத்துள்ளார்.