முன்னாள் தலைமை நீதிபதி சாலே அபாஸ் மற்றும் இரு நீதிபதிகளையும் அவர்களுடைய பதவிகளிலிருந்து 1988 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் தூக்கி எறிந்தார். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நீதி வழங்கப்பட்டது.
ஆனால், 2001 ஆம் ஆண்டில் கம்போங் மேடான் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரையில் நீதி மறுக்கப்பட்டுள்ளது.
கம்போங் மேடான் சம்பவத்தில் கடுமையான உடல் காயங்களுக்கு ஆளான எழுவர் அரசாங்கத்திலிருந்து எவ்வித உதவியும் கிடைக்காததால், பரிகாரம் தேடி நீதிமன்றம் சென்றனர் என்று அந்த எழுவரின் வழக்குரைஞரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். மனோகரன் கூறினார்.
நீதி கோரி கம்போங் மேடான் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய வரும் கடும் போராட்டத்திற்கு சமநிகராக இருக்கிறது நீதித்துறை அக்கோரிக்கையை பிடிவாதமாக நிராகரிப்பது”, என்று மனோகரன் இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் எழுவர் – ஆர். சுரேஸ், எ. அம்பலகன், வி. அன்பரசன், பி. ஜனகன் பிள்ளை, பி. தமிழ் செல்பம், வி. சுப்ரமணியம் மற்றும் வி. முனியாண்டி – ஷெய்க் முஸ்தாபா பின் அஹமட், அப்போது ஒசிபிடி, நிக் இஸ்மாயில் பின் யுசுப், அப்போது சிலாங்கூர் போலீஸ் தலைவர், போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகியோருக்கு எதிராக மார்ச் 5, 2004 இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
எழுவரும் அந்த இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள். அத்தாக்குதல் நடைபெறாமல் தவிர்ப்பதற்கு தக்க நடவடிக்களை எடுக்கத் தவறியதற்கும், அத்தாக்குதல் நடந்தபோது அதனைக் கட்டுப்படுத்தாமல் விட்டதற்கும் போலீசார்தான் பொறுப்பு என்பது அந்த எழுவரின் நிலைப்பாடு.
அவ்வாறே, கம்போங் மேடானில் நிலவரம் கட்டுப்பாட்டில் இல்லாத வேளையில், அங்கு நிலவரம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அரசாங்கம் அதன் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் வாயிலாக தவறான செய்திகளை அளித்ததற்காக அரசாங்கமும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதும் அந்த எழுவரின் வாதமாகும்.
பாதிக்கப்பட்டவர்களின் வாதப்படி அவர்களுக்கு உள்ளூர்வாசிகளுடன் எவ்விதத் தகராறும் கிடையாது. வெளியிடத்திலிருந்து வந்தவர்கள் அங்கு இருந்தனர். அவர்கள்தான் தாக்குதலுக்குக் காரணம்.
பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அச்சம்பவம் பற்றி தெரிந்திருந்தனர். அவர்கள் வீட்டிற்குள்ளே இருந்தனர். ஆனால், அங்கு போலீசார் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் பிரச்னைகள் ஏதும் கிடையாது என்ற ரேடியோ மற்றும் தொலைக்காட்சி செய்திகளைக் கேட்ட பின்னர் அவர்கள் பிரச்னையில் மாட்டிக்கொண்டனர். அச்செய்திகளை நம்பி அவர்கள் தங்களுடைய வீட்டை விட்டு வெளியில் வந்து தங்களுடைய அலுவல்களில் ஈடுபட்டனர் என்று மனோகரன் விளக்கம் அளித்தார்.
தாக்குதல்கள் நடந்தபோது கம்போங் மேடான் பகுதிகளில் 2,053 போலீஸ்காரர்கள் கடமையில் இருந்தனர். அப்பகுதிகள் சுற்றிவலைக்கப்பட்டிருந்தது. சாலைத் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. இருந்தும், போலீசாரால் தாக்குதல்களை நிறுத்த முடியவில்லை.
“வெறும் 50 பேர் தங்குதடையின்றி சென்று மக்களை கத்திகளால் கண்டபடி வெட்டித் தள்ளியதை எப்படி போலீசாரால் தடுக்க இயலாமல் போனது?”, என்று மனோகரன் வினவினார்.
“அப்பகுதியில் பிரச்னைகள் ஏதும் இல்லை. அங்கு சூழ்நிலை கட்டுப்பாட்டில் இருக்கிறது
என்ற அதிகாரப்பூர்வமான செய்திகளை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய வீட்டை விட்டு வெளியேறி தங்களுடைய வேலைகளைக் கவனித்தனர்.” இதற்கு யார் பொறுப்பு என்றும் அவர் வினவினார்.
கண்டபடி வெட்டித் தள்ளியதற்கு சாட்சியம் எங்கே?
அமைதி, தற்காப்பு, உயிர்கள் மற்றும் பொது இடங்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வது போலீசாரின் கடமை என்று போலீஸ் சட்டம் 1967 திட்டவட்டமாக கூறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டிய மனோகரன், “மனுதாரர்களின் வாதங்கள் எதனையும் போலீசார் தவறு என்று நிரூபிக்கவில்லை”, என்று மேலும் கூறினார்.
உயர்நீதிமன்ற நீதிபதி கம்போங் மேடான் சம்பவம் நடந்தது என்பதற்கான சாட்சியம் கோராமல் அதனைக் கவனத்தில் (judicial notice/judicial cognizance) எடுத்துக் கொண்டார். ஆனால், தங்களை யாரோ ஒருவர் கண்டபடி வெட்டித் தள்ளியதை நேரில் கண்ட சாட்சியத்தை மனுதார்கள் முன்வைக்க தவறி விட்டனர் என்றும் நீதிபதி கூறினார் என்றார் மனோகரன்.
மேலும், “இருதரப்பினர் வாதங்களிலும் முரண்பாடுகள் இருந்தன” என்று கூறி அந்த எழுவரின் வழக்கை மே மாதம் 2009 இல் நீதிபதி தள்ளுபடி செய்தார். “அந்த முரண்பாடுகள் சாதாரணமானவை” என்று மனோகரன் குறிப்பிட்டார்.
“மேல்முறையீடு வாதத்திற்கு ஐந்தே நிமிடங்கள்”
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜூன் 6, 2009 ஆம் ஆண்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நம்பமுடியாதது நடந்தது என்று மனோகரன் கூறினார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நவம்பர் 23, 2011 இல் விசாரணை தொடங்கியபோது மனுதாரர்களின் வாதத்தை முன்வைக்க அவர்களுடைய வழக்குரைஞருக்கு வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டும் அளிக்கப்பட்டது.
“கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்களுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்த போது, நான் எதிர்ப்பு தெரிவிக்கலாம் ஆனால் நீதிமன்றம் அதன் முடிவைத் தெரிவிக்க தயாராக இருக்கிறது என்று நீதிபதி கூறினார். அதன் பின்னர், அவர் தீர்ப்பை வழங்கினார்”, என்று மனோகரன் கூறினார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை நிலைநிறுத்தி எழுவரின் முறையீட்டை தள்ளுபடி செய்தது. மனுதாரர்கள் செலவுத்தொகையாக ரிம10,000 கட்ட வேண்டும் என்றும் அந்நீதிமன்றம் உத்தரவிட்டது.
“எழுவருக்கும் இது ஒரு பேரிடியாகும். கம்போங் மேடானில் கட்டவிழுத்து விடப்பட்ட இனவாத வன்செயல்களால் மார்ச் 2001 இருந்து அவர்கள் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். இப்போது, நீதி கேட்டதற்கு விலையாக செலவுத்தொகை கட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்”, என்றார் மனோகரன்.
“போலீசாரும் அரசாங்கமும் அவர்களுடையக் கடமையைச் செவ்வனே ஆற்றத் தவறியதால் விளைந்த துன்பங்களுக்கு நீதி கோரிய அந்த கம்போங் மேடான் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எழுவரின் மனோதிடத்திற்கு இந்தச் செலவுத்தொகை உத்தரவு ஒரு “தண்டனை” ஆக்கப்பட்டுள்ளது.
“இது அந்த எழுவரும் உச்சநீதிமன்றத்திற்கு (பெடரல் நீதிமன்றம்) முறையீடு செய்வதைத் தடுப்பதுமாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.
அது அவ்வாறாக இருப்பினும், மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் மனு பெடரல் நீதிமன்றத்தில் டிசம்பர் 23, 2011 இல் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அந்த வழக்கு நிர்வகித்தல் பெடரல் நீதிமன்ற பதிவகத்தில் நடந்தது. மனு மீதான வாதம் மார்ச் 5 இல் நடைபெறும் என்று மனோகரன் தெரிவித்தார்.
படகை ஆட்டாதீர்
கம்போங் மேடான் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மறுத்த மனித உரிமை ஆணையத்தையும் (சுஹாகாம்) மனோகரன் சாடினார்.
“ஓர் ஆணையர் என்னிடம் கூறினார்: ‘படகை ஆட்டாதீர். நாங்கள் விசாரணை நடத்த முடியாது.'”
“கம்போங் மேடான் சம்பவம் என்றால், எவரும் அது குறித்து விசாரணை நடத்த விரும்புவதில்லை. சுஹாகாம் விசாரணை நடத்த விரும்பவில்லை. மேல்முறையீட்டு நீதிமன்றம் எங்களுடைய வாதத்தை செவிமடுக்க ஐந்து நிமிடங்களை மட்டுமே அளிக்கிறது. அவர்கள் எதனை மறைக்க முயற்சிக்கின்றனர்?”, என்று மனோகரன் வினவினார்.
சம்பவம் நடந்த பின்னர் போலீசார் 83 பேரை கைது செய்தனர். அது சம்பவம் நடந்த பின்னர் செய்யப்பட்டதால், அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது எவருக்கும் நிச்சயமாக தெரியாது என்றாரவர்.
கம்போங் மேடான் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படுவதற்கு ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் மனோகரன்.
அந்த ஆணையம் அத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் மற்றும் அவர்களைத் தடுக்கவும் நிறுத்தவும் போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து விசாரித்து நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றார்.
“போலீசார் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனரா?”
செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு சார்பற்ற அமைப்பான சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம், மார்ச் 2001 இல் நடந்த கம்போங் மேடான் சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்றும் வழக்குத் தொடர்ந்துள்ள எழுவரோடு மொத்தம் 90 பேர் படுங்காயங்களுக்கு ஆளாகினர் என்றும் தெரிவித்தார்.
எவரிடமிருந்தும் எவ்வித பரிகாரமும் கிடைக்காததால், இந்த எழுவரும் நல்லுள்ளம் படைத்த சில வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களின் உதவியோடு இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
நடந்த அக்கிரமங்கள், அவற்றை புரிந்தவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கின்றன. ஆனால், “கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றத்தைப் புரிந்தவர்கள் கைது செய்யப்படவில்லை”, என்று ஆறுமுகம் கூறினார்.
இரு மிகமுக்கியமான கேள்விகளுக்கு பதில் காணப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்: 1) போலீசார் இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டனரா? 2) இந்தப் பேரிடர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும் இழப்பீடும் அளிப்பதற்கு என்ன செய்யப்படும்?