பிஎன் உள்-ஆட்கள் பொதுத் தேர்தலில் பக்காத்தானில் வெற்றி பெற உதவுகின்றனர்

ஆளும் கூட்டணியை வீழ்த்துவதற்கு பிஎன் உறுப்பினர்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டு எதிர்த்தரப்புக்கு உதவி வருவதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு இன்று கூறிக் கொண்டுள்ளார்.

அவர் பக்காத்தான் ராக்யாட் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நிகழும் கடைசி பக்காத்தான் மாநாடாக அது கருதப்படுகிறது.

அந்த பிஎன் உறுப்பினர்களைத் தவிர பல முன்னாள் பிஎன் ஆதரவாளர்களும் உதவி செய்வதற்காக பக்காத்தானை அணுகியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

“போலீஸ், இராணுவ வீரர்களும் முன்பு ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்களும் முன்னாள் பிஎன் அமைச்சர்களும், அம்னோ/பிஎன் அரசாங்கத்தில் இன்னும் வேலை செய்கின்றவர்களும் அந்தக் கட்சிகளில் பதவி வகிக்கின்றவர்களும் கூட நடப்பு அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் தாங்கள் எந்த வகையில் உதவ முடியும் என எங்களைக் கேட்டுள்ளனர்.”

“பிஎன் உறுப்புக் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளுக்குள் இருந்து வேலை செய்யும் போது பக்காத்தானுக்கு வெற்றி நிச்சயம் என்பது உறுதி செய்யப்படும்,” என்றார் அவர்.

முகமட் சாபு அலோர் ஸ்டாரில் தொடக்கி வைத்த அந்த மாநாட்டில் ஈராயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்..