அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் ஊழலை எவ்வாறு ஒடுக்கப் போகிறோம் என்பதற்கான திட்டங்களை வழங்குமாறு பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் எதிர்த்தரப்பு பக்காத்தான் கூட்டணியை கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் இன்று அலோர் ஸ்டாரில் நிகழும் பக்காத்தான் மாநாட்டில் மக்கள் குரல் அங்கத்தில் பேசினார்.
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்ட ஒரு டிரில்லியனுக்கும் மேற்பட்ட பணத்தை எப்படி நாட்டுக்குத் திரும்பக் கொண்டு வர பக்காத்தான் எண்ணியுள்ளது என்பதையும் அந்தக் கூட்டணி தெரிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அம்பிகா குறிப்பிட்டார்.
“அந்த பணத்தை நாட்டுக்குள் திரும்பக் கொண்டு வர பக்காத்தான் என்ன திட்டம் வைத்துள்ளது… அந்தப் பணம் மக்கள் பணம் என்பதால் பெரும் தொகையான அது நாட்டுக்குள் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும்,” என அவர் சொன்ன போது பலத்த கைதட்டல் எழுந்தது.
“அந்த நோக்கத்துக்காக ஒர் இடைக்காலத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அரசு சாரா அமைப்பின் தலைவர் கேட்டுக் கொண்டார். தரகுப் பணத்துக்கு எதிராக சுயேச்சை ஆணையத்தை அமைப்பதற்கு முன்னதாக ஹாங்காங் அமலாக்கிய பொது மன்னிப்புக் கொள்கையை பக்காத்தான் பின்பற்றலாம் என்றும் அம்பிகா யோசனை கூறினார்.
“ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் சிக்கலான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு அனுமதிக்கும் வகையில் மன்னிப்பு வழங்கும் அந்தக் கொள்கை அமையும்.”
“நாம் பெரிய மீன்களைத் தண்டிக்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து முன்னேறும் பொருட்டு சிறிய மீன்களுக்கு மன்னிப்பு கொடுக்கலாம். அந்த வகையில் பக்காத்தானுடைய நிலையை அறிந்து கொள்ள நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றார் அவர்.