அன்வார் விடுதலைக்கு எதிராக முறையீடு செய்வது பற்றிய கேள்வியை ஏஜி தவிர்க்கிறார்

கடந்த திங்கட்கிழமை அன்வார் இப்ராஹிம் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்யுமா என்னும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் தவிர்த்துள்ளார்.

அன்வார் பற்றி ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தாம் மீன் பிடிக்கச் செல்வது, சீனப் புத்தாண்டு விடுமுறைகள்,  வார இறுதி நிகழ்வுகள் பற்றிப் பேசவே அவர் விரும்பினார்.

“இந்த வார இறுதி இன்று சனிக் கிழமை, விரைவில் சீனப் புத்தாண்டும் வருகிறது. நான் மீன் பிடிக்கச் செல்ல விரும்புகிறேன்,” என அவர் நிருபர்கள் மொய்த்துக் கொண்ட போது சொன்னார்.

டிஎன்ஏ என்ற மரபணு ஆதாரத்தை நிராகரித்த பின்னர் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா அன்வாரை விடுவித்தார்.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்து கொள்ள வேண்டும் என அந்த வழக்கில் அரசு தரப்புக்கு தலைமை தாங்கிய சொலிஸிட்டர் ஜெனரல் II முகமட் யூசோப் ஜைனல் அபிடின் பரிந்துரை செய்துள்ளார்.

அவர் அந்தப் பரிந்துரையை சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தின் விசாரணை, முறையீட்டுப் பிரிவிடம் புதன் கிழமை சமர்பித்துள்ளார்.

ஆனால் முறையீடு செய்வது பற்றி இன்னும் எந்த முடிவும் செய்யப்படவில்லை என நேற்று அந்தப் பிரிவின் தலைவர் கமாலுதின் முகமட் சைட் கூறினார்.

தங்களது கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக அரசு தரப்பு முறையீடு செய்ய வேண்டும் என புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லனுடைய தந்தையார் அஸ்லான் முகமட் லாஸிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் அரசு தரப்பு முறையீட்டை சமர்பிக்க வேண்டும். என்றாலும் எதிர்வரும் சீனப் புத்தாண்டு விடுமுறைகளைக் கருத்தில் கொண்டால் முறையீட்டுக்கான விண்ணப்பத்தைச் சமர்பிப்பதற்கு இறுதி நாள் இம்மாதம் 25ம் தேதி ஆகும்.