பயணப் பாதைகளை கைவிடுவது முழுக்க முழுக்க வர்த்தக முடிவு என்கிறார் டோனி

ஏர் ஏசியா x இழப்பை ஏற்படுத்தி வரும் தனது நான்கு அனைத்துலக பயணப் பாதைகளை கைவிட்டிருப்பது முழுக்க முழுக்க வர்த்தக முடிவு என அந்த விமான நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டோனி பெர்ணான்டெஸ் கூறுகிறார்.

கோலாலம்பூர்-மும்பாய், புது டில்லி, பாரிஸ், லண்டன் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்ள ஏர் ஏசியாவின் சகோதர நிறுவனமான ஏர் ஏசியா x எடுத்த முடிவு, மலேசிய விமான நிறுவனத்தை அணைத்துக் கொண்டு  அதனுடன் வர்த்தக வியூகத்தை உருவாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கை எனக் கூறப்படுவது முற்றிலும் உண்மையல்ல என்றும் “எரிச்சலை” தருகிறது என்றும் அவர் சொன்னார்.

“அஸ்ரான் ஒஸ்மான் ரானி (ஏர் ஏசியா x தலைமை நிர்வாக அதிகாரி) ஒரு வர்த்தக முடிவைச் செய்துள்ளார். நாங்கள் தான் முதலில் குறைந்த கட்டண தொலை தூர விமானப் பயணத்தை அறிமுகம் செய்தோம். இப்போது சிங்கப்பூரர்கள் அதனைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.”

“அந்த வகையில் நான்கு முதல் எட்டு மணி நேரப் பயணத்தைக் கொண்டுள்ள சேவைகளே மிகவும் ஆதாயகரமானவை என்பதை அவர் கண்டு பிடித்துள்ளார். அந்தச் சேவைகளில் ஏர் பஸ் 330 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.”

“ஆகவே இதற்கும் எம்ஏஎஸ்-ஸுக்கும் ஏர் ஏசியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே வேளையில் ஏர் ஏசியாவை ஏற்றுக் கொள்வதற்காக அந்தச் சேவைகள் நிறுத்தப்படுவதாக எம்ஏஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி அகமட் ஜாவ்ஹாரி கேள்விப்படுகிறார்,” என டோனி மேலும் கூறினார்.

அவர் இன்று மே பாங்க் முதலீட்டுப் பொருளகம் ஏற்பாடு செய்துள்ள 2012ம் ஆண்டுக்கான சில்லறை வாணிக வியூகங்கள் என்னும் தொடரில் உரையாற்றிய பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.

சில துறைகளில் எம்ஏஎஸ்-ஸும் ஏர் ஏசியாவும் ஒத்துழைப்பது நல்லது எனக் குறிப்பிட்ட டோனி, அது போட்டியை அழித்து விடும் எனக் கூறுவது தவறு என்றார்.

ஏர் ஏசியாவுக்கு ஏற்றமான காலம்

2012ம் ஆண்டுக்கான தமது அவாக்கள் பற்றியும் அவரிடம் வினவப்பட்டது. ஏர் ஏசியாவுக்கு இவ்வாண்டு மிகவும் சாதகமாகத் தொடங்கியுள்ளதாக டோனி குறிப்பிட்டார். இவ்வாண்டு ஜனவரி மாத விற்பனை அளவு  முந்திய ஆண்டு ஜனவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் மிகச் சாதனை அளவாக இருப்பதாக அவர் சொன்னார்.

“வடக்கு ஆசிய வட்டாரத்தில் விற்பனை பெரிதும் அதிகாரித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.”

“நாங்கள் ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறோம். கடந்த ஆண்டு 32 மில்லியன் பயணிகளைக் கொண்டு சென்றோம். அந்த எண்ணிக்கை 2010ம் ஆண்டை விட அதிகமாகும்.

“ஆகவே இவ்வாண்டும் ஏர் ஏசியாவுக்கு ஏற்றமாக இருக்கும் என நான் கருதுகிறேன். உண்மையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அது தொடர வேண்டும்,” என்றார் அவர்.

“எதிர்காலம் சிறப்பாகத் தெரிகிறது. செலவுகளைக் குறைவாக வைத்திருப்பது எங்களைப் பொறுத்ததாகும்.  கட்டணங்களை குறைவாக வைத்திருப்பதற்கு விமான நிலையங்களும் பங்காற்ற வேண்டும்.”

“நாம் கட்டணங்களை உயர்த்தினால் நாம் வளர முடியாது. உண்மையில் அது எங்கள் கோட்பாட்டுக்கு எதிரானது,” என டோனி உறுதியாகக் கூறினார்.

பெர்னாமா