நீதிபதிகள் தங்களது பதவிகளைத் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் ஊழல் நடைமுறைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அரிபின் ஸாக்காரியா அறிவுரை கூறியுள்ளார்.
நீதிபதிகள் தாங்கள் சார்ந்துள்ள பதவிகளின் கௌரவத்தையும் நேர்மையையும் தொடர்ந்து பாதுகாத்தும் வர வேண்டும் என அவர் சொன்னார்.
“நாம் எல்லா நேரத்திலும் சமூகத்தில் நமக்கு உள்ள நிலைக்கு பொருத்தமாக நடந்து கொள்ள வேண்டும்.” “தனிப்பட்ட முறையிலும் அதிகாரத்துவ ரீதியிலும் உங்கள் நடத்தை பொது மக்களுடைய ஆய்வுக்கு உட்பட்டதை என்றும் நினைவில் வைத்திருங்கள். விசாரணை நடத்தும் போது நல்ல ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள்,” என புத்ராஜெயாவில் சட்ட ஆண்டை தொடக்கி வைத்து உரையாற்றிய போது அரிபின் கூறினார்.
நீதிமன்றத்தில் காணொளிப் பதிவு தொடங்கப்பட்ட பின்னர் தவறாக நடந்து கொள்வதாக நீதிபதிகள் பற்றியும் வழகுரைஞர்கள் பற்றியும் குறைவான புகார்களே வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதிபதிகளுக்கு எதிராக விருப்பம் போல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதையும் வழக்குரைஞர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரிபின் வலியுறுத்தினார்.
“உங்கள் வார்த்தைகளைப் பொது மக்கள் கடுமையாக எடுத்துக் கொள்வதே அதற்குக் காரணம். அத்தகைய குற்றச்சாட்டுக்கள் நீதித் துறையின் நேர்மையை கீழறுத்து விடும்,” என்றார் அரிபின்.
தலைமை நீதிபதி எந்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும் அது விகே லிங்கம் ஒளிநாடா விவகாரத்தையும் முதுநிலை நீதிபதி ஒருவர் இன்னொரு நீதிபதியின் தீர்ப்பைக் களவாடினார் என்ற குற்றச்சாட்டுக்களையும் பற்றியே அவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.
சட்ட ஆட்சியிலும் நீதித் துறை சுதந்திரத்திலும் நீதிபதிகள் முழுக் கடப்பாடு கொண்டுள்ளதாக அரிபின் மீண்டும் வலியுறுத்தினார்.
“பொது மக்களுடைய நம்பிக்கையையும் மரியாதையையும் நீதித் துறை பெறுவதற்கு அந்த இரு அடிப்படைக் கோட்பாடுகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்,” என்றார் அவர்.