புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்வது பற்றிய பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு களைப்படைந்து விட்டதாக விவாத அரங்கு ஒன்றில் மாணவர் பேராளர் ஒருவர் கூறிய போது “நான் களைப்படையவில்லை” என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
PTPTN. என்ற மாணவர் கடன்கள் தொடர்பான பிரச்னைகளை மாணவர்கள் எப்படித் தீர்க்க முடியும் என்பதற்கு பக்காத்தான் இன்னும் ஒரு தீர்வை வழங்கவில்லை என காமிஸ் அமைப்பை (Gabungan Mahasiswa/i Islam Se Malaysia) பிரதிநிதிக்கும் அந்த மாணவர் சொன்னார்.
“எங்கள் நிலைமை இலவசச் சுகாதாரக் கவனிப்பு போன்ற வசதிகளைப் பெறும் சிறைக் கைதிகளைக் காட்டிலும் மோசமானது,” என்றும் அந்த மாணவர் குறிப்பிட்டார்.
அலோர் ஸ்டாரில் பக்காத்தான் ராக்யாட்டின் மூன்றாவது தேசிய மாநாட்டில் பேராளர்களுடன் நடத்தப்பட்ட விவாதத்தில் அவர் பேசினார்.
கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் கைப்பற்றினால் 2005ம் ஆண்டு தொடக்கம் மாணவர்கள் எடுத்துள்ள எல்லாக் கடன்களையும் கிளந்தான் மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என அந்த மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா பின்னர் அறிவித்தார்.
புத்ராஜெயாவில் பிஎன் -னை அகற்றும் தங்களது மூன்று ஆண்டு காலத்தை மீண்டும் மீண்டும் கூறுவதற்குப் பதில் வேறு ஏதும் சுலோகங்கள் பக்காத்தானிடம் இருக்கிறதா என்று கூட அந்தக் கூட்டணியின் மூத்த தலைவர்களிடம் வினவப்பட்டது.
“அங்கு செல்லத் திட்டங்கள் உண்டு”
பக்காத்தான், புத்ராஜெயாவை பிஎன்-னிடமிருந்து கைப்பற்றுவது பற்றி மட்டும் பேசவில்லை. அங்கு செல்வதற்கான திட்டங்களையும் கொள்கைகளையும் வைத்திருப்பதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி விளக்கினார்.
புத்ராஜெயா பற்றிப் பேசுவதை பக்காத்தான் தவிர்க்க முடியாது எனக் கூறிய அவர் அதன் எல்லா யோசனைகளும் ஒரே இலக்கைக் கொண்டுள்ளதே அதற்குக் காரணம் என்றார்.
“பிரச்னைகள் சாலைகளில் தான் உள்ளன. மிக அதிகமான போக்குவரத்து. அங்கு சென்றடைவதற்கு முன்னர் நாங்கள் பல இடங்களில் திரும்ப வேண்டியுள்ளது,” என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பிற்பகல் ஒரு மணிக்கு முற்பகல் நிகழ்வுகள் முடிந்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்
இதனிடையே அலோர் ஸ்டாரில் நிகழும் மூன்றாவது பக்காத்தான் தேசிய மாநாட்டின் நோக்கம் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுதலையானதைக் கொண்டாடுவதற்காக மட்டுமல்ல. எதிர்பார்க்கப்படும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தங்களை செய்வதற்குமாகும் என லிம் விளக்கினார்.
“அடுத்த தேர்தல் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குக் கறை படிந்த தேர்தலாக இருக்கக் கூடும்,” என அவர் எச்சரித்தார்.
அவசியமான சீர்திருத்தங்களை பக்காத்தான் அமலாக்குவதற்கு உதவியாக விவாதத்தின் போது பல யோசனைகளை வழங்கிய பேராளர்களுக்கு லிம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“மலேசியாவைத் தூய்மையாக்கி காப்பாற்றுங்கள் என்னும் கருப் பொருள் மிகவும் பொருத்தமானது. ”
அடுத்த ஆண்டுக்குள் நடத்தப்பட வேண்டிய அடுத்த தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெறவில்லை என்றால் நாம் நிச்சயம் நெருக்கடியை எதிர்நோக்குவோம்.”
பல துறைகளில் மலிந்து விட்ட ஊழலைத் துடைத்தொழிப்பதற்கு ஊழல் தடுப்புத் திட்டம் ஒன்றை பக்காத்தான் வழங்க வேண்டும் என பெர்சே தலைவர் எஸ் அம்பிகா தெரிவித்த யோசனை பற்றிக் குறிப்பிட்ட டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், அந்த யோசனையை எதிர்த்தரப்புக் கூட்டணி ஆராய்வதாகச் சொன்னார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அந்தத் திட்டத்தை வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.