அம்னோ எதிர்க்கட்சிகளுக்கு ‘உதை பந்தாகி’ வருகிறது என நஜிப் வருத்தம்

எதிர்க்கட்சிகள் உள் பிரச்னைகளை எதிர்நோக்கும் போது அம்னோவையும் பிஎன் -னையும் குற்றம் சாட்டுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியுள்ளார்.

“அம்னோ ஏன் உதை பந்தாக வேண்டும் என்பதே கேள்வியாகும். பாஸ் கட்சிக்குள் உட்பூசல் மலிந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.”

“பாஸ் கட்சிக்குள் பிளவுகள் தோன்றுவது அதன் உள் விவகாரமாகும். அதனால் அங்கு பகைமையும் சுலோகங்களிலும் நோக்கங்களிலும் மாற்றம் ஏற்படக் கூடும். அது பாஸ் விவகாரம். அம்னோவுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை,” என அவர் பேராக் பாரிட் புந்தாரில் தேசிய குடியானவர், கால் நடை வளர்ப்போர், மீனவர் தினத்தைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

பிஎன்-னை வீழ்த்துவதற்கு அம்னோ உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைத்து வருவதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறியிருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார்.

“உண்மையில் போலீஸ் தம்மை தள்ளி விடாத வேளையில் போலீஸ் தம்மை தள்ளி விட்டது என அவர் துணிச்சலுடன் சொல்கிறார்,” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் விளக்கக் கூட்டங்கள்

குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் விளக்கக் கூட்டங்களை நடத்த எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட நஜிப்:

“அது வழக்கமானதே. எதிர்க்கட்சிகளினால் வேறு என்ன செய்ய முடியும் ? நாம் ஜனநாயக நாட்டில் இருப்பதால் அவை விளக்கக் கூட்டங்களை நடத்தவில்லை என்றால் செராமாக்களுக்கு அல்லது கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும். மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்கு எங்களுக்கு தனி வழிகள் உள்ளன,” என்றார் அவர்.

அந்த விளக்கக் கூட்டங்கள் பிஎன்-னை பாதிக்குமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த நஜிப்,” நான் அப்படி நினைக்கவில்லை. அது விநோதமனதோ வழக்கத்துக்கு மாறானதோ அல்ல. ஆனால் அவர் சிறிது குழப்பத்தை ஏற்படுத்த விரும்புவார். ஆனால் அது இயல்பானது,” என்றார்.

அடுத்த பொதுத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் தீவிரக் கவனம் செலுத்தும் என்றும்  நஜிப் சொன்னார்.

பெர்னாமா