மலேசிய விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தாஜுடின் ரம்லி, மலேசியன் இன்சைடர் செய்தித்தளத்துக்கு எதிராக ரிம200 மில்லியன் வழக்கைப் பதிவு செய்துள்ளார்.
அதில் மலேசியன் இன்சைடர் தலைமை செயல் அதிகாரியும் செய்தியாசிரியருமான ஜஹாபார் சடிக், செய்தியாளர் ஷாஸ்வான் முஸ்தபா கமால் ஆகியோரை எதிர்வாதிகளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2011 மே 31-இல், அந்த இணையத்தளத்தில் ‘ஏஜி ஊழல்குற்றம் புரியவில்லை என்று எம்ஏசிசி முடிவு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரை தொடர்பில் அவர் அந்த அவதூறு வழக்கைப் பதிவு செய்துள்ளார்.
அக்கட்டுரை, தாம் 1994-இலிருந்து 2011 வரை மாஸின் தலைவராக இருந்த காலத்தில் அந்நிறுவனத்துக்கு ரிம8 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது என தாஜுடின் கூறினார்.
மாஸில் இருந்தபோது தாம் நேர்மைக்குறைவாக நடந்துகொண்டதாகவும் அதன் காரணமாக தமக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிடுகிறது என்றாரவர்.
மாஸில் பல தகிடுதத்தங்கள் செய்தததாகவும் அதன் தலைவராக இருக்கும் தகுதி தமக்கில்லை என்றும் மாஸைப் பயன்படுத்தி இரகசியமாக ஆதாயம் அடைந்ததாகவும் அது மறைமுகமாகக் குற்ற்ம் சாட்டியுள்ளது என்றவர் சொன்னார்.
தாம் ஒழுக்கக்குறைவாகவும் நேர்மையற்ற முறையிலும் நடந்துகொண்டிருப்பதாகக் கூறி மலேசிய ஊழல் தடுப்பு மையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டிருக்கிறது என்றும் தாஜிடின் கூறினார்.
ஜூன் மாதம் தம் வழக்குரைஞர்கள் எதிர்வாதிகளுக்குக் கடிதம் எழுதி அக்கட்டுரையில் தம்மைக் குற்றம்சாட்டும் பகுதியை நீக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு எதிர்வாதிகள், அது அவமதிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் அவ்விசயம் ஏற்கனவே பொதுமேடையில் அறியப்பட்ட ஒன்றுதான் என்றும் 2010 டிசம்பர் 16-இல் ஸ்டார் நாளேட்டில் அது வெளிவந்துள்ளது என்றும் கூறிவிட்டனர்.
தாஜுடின் அக்கட்டுரை தம்மை அவமதிப்பதாகக் கூறி அதற்காக ரிம200 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ளார்.
இணையத்தளத்தில் உள்ள அக்கட்டுரையை மீட்டுக்கொள்ளவும் வேண்டும் என்பதும் அவரது கோரிக்கை. தாஜுடின் 2011 ஆகஸ்ட் 18-இல், வழக்கைப் பதிவு செய்தார். அது, செப்டம்பர் 19-இல், நீதிபதி ஹர்மிண்டர் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.