அரசாங்கம் எளிய நிபந்தனையுடன் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் கடனை என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என அண்மையில் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து அதன் சொத்துக்கள் முடக்கப்ப்பட்டு விட்டதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
தமது அமைச்சு கடமைகளிலிருந்து மூன்று வார விடுமுறையை எடுக்க மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் முடிவு செய்துள்ளது மீது கருத்துரைத்த பிரதமர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள என்எப்சி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக ஷாரிஸாட்டின் கணவர் முகமட் சாலே இருப்பதால் ஷாரிஸாட் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என நெருக்குதல் அதிகரித்து வருகிறது.
என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவன விவகாரத்தில் ஷாரிஸாட் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதை அதிகாரிகள் விசாரிப்பதற்கு அந்த முடிவு அனுமதிக்கும் என நஜிப் சொன்னதாக பெர்னாமா குறிப்பிடுகிறது.
அமைச்சர் என்னும் முறையில் அந்தத் திட்டம் தமது குடும்பத்துக்குக் கிடைப்பதில் ஷாரிஸாட் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதை அதிகாரிகள் தொடக்கத்திலிருந்து விசாரிப்பர் என்றும் நஜிப் தெரிவித்தார்.
“விடுமுறையில் செல்ல ஷாரிஸாட் எடுத்துள்ள முடிவு குறித்து நான் அவருடன் விவாதித்தேன். முழுமையான விசாரணையை நடத்துவதற்கு உதவும் என்பதால் அது சரியான முடிவாகும்,” என பேராக் பாரிட் புந்தாரில் தேசிய குடியானவர், கால் நடை வளர்ப்போர், மீனவர் தினத்தை தொடக்கி வைத்த பின்னர் நஜிப் நிருபர்களிடம் கூறினார்.
அந்த விஷயத்தை துணைப் பிரதமர் கவனிக்கிறார்
என்எப்சி விவகாரத்தை நல்ல முறையில் தீர்ப்பதற்கான வழிகளை ஆய்வு செய்யுமாறு தாம் துணைப் பிரதமர் முஹைடின் யாசினையும் விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமாரையும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் நஜிப் அறிவித்தார்.
நேற்று தொடக்கம் மூன்று வார விடுமுறைக்குத் தாம் விண்ணப்பித்து கொண்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை ஷாரிஸாட் கூறினார்.
2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில், என்எப்சி தனது நோக்கங்களை அடையத் தவறி விட்டது என சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து அந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.