தைப்பொங்கல் – தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ் மரபில் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தொன்றுதொட்டு சொல்லிவருவது வழக்கம். ஏனென்றால் ஐப்பசியில் மழை பெய்து தையில் விளைச்சல் கண்டு விவசாயிகள் பொருளாதார வளம் காண்கிற நாள். அதுமட்டுமல்ல, உழைப்பின் பெருமையை உலகுக்கு உரைக்கும் தமிழர்களின் தலைசிறந்த விழாவான பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுவதால் மாதத்தில் தை தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

தை மாதம் முதலாக அல்லாமல் சித்திரை தொடங்கி பங்குனி வரையான மாதங்களின் வைப்புமுறை நெடுங்காலத்துக்கு முன்பே சிலரால் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. மூடத்தனமான கதைப் பின்னணிகொண்ட சித்திரை மாதத்தை தமிழ்ப்புத்தாண்டாக வைத்துக் கொண்டாடும் வழக்கத்தைப் பின்பற்றுவது பொருந்தாது தமிழர்களுக்கு எனத் தனியாக ஓர் ஆண்டு முறை வேண்டும் என எண்ணி தமிழறிஞர்களும், சான்றோர்களும், புலவர்களும் மறைமலை அடிகள் தலைமையில் 1921ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் கூடி முன்பு செய்த ஆய்வின் பயனாக திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என முடிவு கட்டினர்.

திருவள்ளுவர் பெயரால் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிப்பிடலாம் என முடிவெடுத்தனர். இம்முடிவை கூட்டாக எடுத்த தமிழ்ப்பெரியோர்களில் மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.

இந்தத் தமிழரிஞர்கள் குழு எடுத்த முடிவின்படி தமிழக அரசு 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. 1972 ஆண்டு அரசிதழிலும் வெளியிட்டு – தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.

ஆனால் தமிழ்ப்புத்தாண்டு சித்திரையாகவே கொண்டாடப்பட்டு வந்தது. தமிழ்ப் புத்தாண்டை முறையாக அரசு அறிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகமும், தமிழ் உணர்வாளர்களும், எண்ணற்ற தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து குரல் எழுப்பியதன் பயனாக கலைஞர் ஆட்சியில் 9.4.2008 அன்று’பிரபவ’ முதல் ’அட்சய’ வரையிலான ஆண்டை பயன்படுத்தக் கூடாது என அறிவித்தது.

சித்திரை மாதம் ஆண்டின் தொடக்க மாதமாக இருந்திருக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக நச்சினார்க்கினியர் ‘கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம்.’ என்று

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி

கூதிர் யாமம் என்மனார் புலவர்’

என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியவர் தான் மேற்கூறியவாறு ஓர் ஆண்டுக் கணக்கு இது என்று காட்டினார்.

சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்பது நச்சினார்க்கினியரின் உரையின் மூலம் அறிய முடிகிறது. அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரையே ஆணித்தரமான சான்று.

சக ஆண்டை நுழைத்தவர்கள் இதை மாற்றினார்கள். சூரியனது ஆட்சி வீட்டிற்கு உரிய சிம்ம ராசிக்குப் பதிலாக சூரியன் உச்சம் பெறும் இராசியான மேஷராசிக்கு மாற்றி அதற்கு உரிய மாதமான சித்திரை மாதத்திலிருந்து ஆண்டுத் தொடக்கத்தை அமைத்து எல்லா மாதங்களுக்கும் அதையொட்டி 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர் வைத்துத் தமிழ் நாட்டில் உலாவ விட்டார்கள். அரசனது ஆதரவு பெற்று கல்வெட்டுகளில் அவர்கள் தொடர்ந்து இந்த மாதப் பெயர்களையும் ஆண்டுப் பெயர்களையும் புகுத்தி நடைமுறைப்படுத்தியதால் அதுவே நிலை பெறலாயிற்று. இது தான் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு ஆன கதை.

பிறகு இதை இந்துமதத்துடன் சம்பந்தப்படுத்துவதற்காக விதை நடவு, வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும், அதற்குக் காரணம் வேளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன். ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து விவசாயத்தில் விளைந்து வேளாண்மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூஜிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.

இந்தக் கதையை இவ்வளவோடு விட்டுவிடாமல், இம்மாதிரியான இந்திர விழா பற்றி கிருஷ்ணன் பொறாமைப்பட்டு தனக்கும் அந்த விழாவை (பூஜையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அதன்படிச் செய்ததாகவும், இந்த இந்திரவிழா, கிருஷ்ணன் விழாவாக மாறியதைக் கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு இந்த கிருஷ்ணன் விழா நடைபெறாமல் போகும் பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடுவோர் வெள்ளாண்மைக்கு ஆதரவாகயிருந்த கால் நடைகள், ஆடு, மாடுகள் அழியும் வண்ணமாகப் பெரு மழையாகப் பெய்யச் செய்து விட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள், கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ணன் மக்களையும், ஆடு, மாடுகளைக் காப்பாற்ற ஒரு பெரிய மலை (கோவர்த்தனகிரி)யைத் தூக்கி அதைத் தனது சுண்டுவிரலால் தாங்கிப் பிடித்து காப்பாற்றியதாகவும், இதனால், இந்திரன் வெட்கமடைந்து, கிருஷ்ணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இரங்கிய கிருஷ்ணன் எனக்கு ஒரு நாள் பண்டிகை, உனக்கு ஒரு நாள் பண்டிகையாக மக்கள் முதல்நாள் எனக்காகப் பொங்கல் பண்டிகையாகவும், பொங்கலுக்கு மறுநாள் பண்டிகை உனக்காக மாட்டுப் பொங்கலாகவும் கொண்டாடும்படியும் செய்து கொண்டார்கள் என்றும் கதைகளைக் கட்டிப் பொருத்தி விட்டார்கள்.

பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையும், மறுநாளைக்கு ஒரு கதையும் போகிப் பண்டிகையென்றும், சங்கராந்தி பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்று நாள் பண்டிகையாக்கி அதில் ஏராளமான கற்பனைகளையும், மூடநம்பிக்கையையும் புகுத்திவிட்டார்கள்.

அதனால் தமிழர்களாக நாம் பொங்கல் பண்டிகை முதல் நாளான தை முதல் நாள் அன்று நல்ல உயர்வான உணவருந்துவதையும், நல்லுடை உடுத்துவதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும், நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்காக உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களைச் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

“நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு”

என்றார் புரட்சிக் கவிஞர்.

சங்க நூல்களும் தை மாதத்தையே புகழ்ந்து போற்றுகின்றன. ‘‘தாயருகா நின்று தவத்தை நீராடுதல்” என்கிறது பரிபாடல் பதினொன்றாம் பாட்டு.

“தையில் நீராடிய தவம்தலைப் படுவாயோ” என்று தையைப் போற்றுகிறது கலித்தொகையின் 59-ஆவது பாடல்.

“நறுவீ ஐம்பால் மகளிராடும் தைஇத் தண்கயம்” என்று பாடுகிறது ஐங்குறுநூற்றின் 84-ஆம் பாடல்.

எனவே தை உழைப்பின் பயனுரைக்கும் ஆற்றல்மிக்கது என்பது சங்க நூற்கள் கருத்து. இந்த இலக்கிய ஆதாரங்களின் மூலம் தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொள்வதற்கு எல்லாத் தகுதியும் உடையது என்கிறதில் ஐயமில்லை.

சித்திரை மாதத்தில் பச்சைப்பயறுகள் காய்ந்து போயிருக்கும். கோடை வெயிலால் விவசாய நிலங்கள் காய்ந்திருக்கும் சுற்றுச்சுழல் மாசடைந்திருக்கும், விவசாயிகளின் பொருளாதாரம் பின்னடைந் திருக்கும். ஆகவே எந்தவிதத்திலும் சித்திரை தமிழ் ஆண்டாக இருந்திருக்கவில்லை. தையே தமிழ்ப்புத்தாண்டாக தமிழ்மக்கள் கொண்டாடவேண்டும் என்கிறார்கள் தமிழறிஞர்கள்.

http://www.kavvinmedia.com