இந்து அறக்கட்டளை வாரியங்கள் மாநில அளவிலேயே அமைக்கப்பட வேண்டும்

இந்து அறக்கட்டளைகள் நில விவகாரங்களுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதால், அவை மாநில அரசுகளாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை தேசிய ஒற்றுமை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கூட்டாட்சி அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் உள்ள கூட்டாட்சிப் பட்டியலின் 15(சி) பிரிவின் கீழ், இந்து அறக்கட்டளைகள் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதை அமைச்சகம் ஒப்புக்கொண்டது.

“இருப்பினும், இந்து அறக்கட்டளைகள் நில உரிமை மற்றும் கோயில்களின் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்திற்கான நில மேலாண்மை ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளதால், இந்து அறக்கட்டளைகளின் நிர்வாகத்தை மாநில அரசுகள் கையாள்வதே சிறந்தது என்று அமைச்சகம் கருதுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மத்திய அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் 2-வது பிரிவின் கீழ், நில விவகாரங்கள் மாநில அதிகார வரம்பிற்குள் வருவதே இதற்குத் காரணமாகும்,” என்று அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் உருவாக்கத்தை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்ட அமைச்சகம், அந்த வாரியம் மத்திய சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதனை நிறுவும் அதிகாரம் மாநில ஆளுநரிடமே வழங்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியது.

“இந்து அறக்கட்டளைகளின் மேலாண்மை மற்றும் நிர்வாகம் சட்டப்பூர்வமாகவும், ஒழுங்காகவும், அந்தந்த மாநிலச் சட்டங்களுக்கு இணங்கவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த அணுகுமுறை முக்கியமானது,” என்று அமைச்சகம் கூறியது.

எந்தவொரு மாநிலத்திலும் உள்ள இந்து சமூகத்தினர் இது போன்ற ஒரு வாரியத்தை அமைக்க விரும்பினால், அந்தந்த மாநில அரசுகளிடம் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும், அவை தேசிய ஒற்றுமை குறித்த அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்தது.

“இத்தகைய முன்மொழிவுகளைப் பரிசீலிக்கவும், வாரியங்களை நிறுவுவதற்காக பொருத்தமான சட்டங்களை இயற்றவும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது,” என்றும் அது குறிப்பிட்டது.

கூட்டாட்சிப் பட்டியலின்15(சி) பிரிவின் கீழ், இந்து அறக்கட்டளைகள் மிகத்தெளிவாக மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று சதீஸ் கூறினார்.

முன்னதாக, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின்படி (State List), சமய விவகாரங்கள் மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று யுனேஸ்வரன் மேலவையில் தெரிவித்தார். இதன் காரணமாகவே இத்தகைய வாரியங்கள் மாநில அளவில் செயல்பட வேண்டும் என்று அவர் விளக்கமளித்தார்.

இந்து அறக்கட்டளை வாரியங்கள் அரசியலமைப்பு விதிகளின்படி மாநில அளவிலேயே நிறுவப்பட வேண்டும் என்று துணை தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆர்.யுனேஸ்வரன் கூறியது, நாடாளுமன்ற மேலவையை  தவறாக வழிநடத்தும் செயல் என்று உரிமை கட்சியின் செயலாளர் சதீஸ் முனியாண்டி குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

-fmt