தலைநகரில் விடியற்காலையில் நடத்தப்பட்ட போக்குவரத்து சோதனையில் பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதினர் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இரவு நேரங்களில் கண்காணிக்குமாறு போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த சோதனையில், 15 முதல் 21 வயதுக்குட்பட்டவர்களே அதிக எண்ணிக்கையில் சிக்கியதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப்பிரிவு துணைத் தலைவர் சுபியான் அப்துல்லா தெரிவித்தார்.
ஜாலான் பஹாங், ஜாலான் கெந்திங் கிள்ளான் மற்றும் ஜாலான் செமரக் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சுமார் 2,000 வாகனங்கள் சோதனையிடப்பட்டு, 797 சம்மன்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
“சந்தேகத்திற்கிடமான முறையில் உருமாற்றம் செய்யப்பட்டதாலும், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாததாலும் எண்பது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்று இன்று அதிகாலை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் பதிவு எண் விதிமுறைகளின்படி இல்லாததால் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றொருவர் உருமாற்றம் செய்யப்பட்ட தனது வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் சுபியான் கூறினார்.
பிள்ளைகள் சஹர் உணவிற்காக வெளியே செல்வதாகப் பொய் கூறிவிட்டு, உண்மையில் வீதி வன்முறை கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
‘சில பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேற தவறான காரணங்களைக் கூறுவதால், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என்று அவர் கூறினார்.”
-fmt
























