மலாக்கா மற்றும் ஜொகூரில் பாரிசான் தனித்து போட்டியிட்டால் பெரிக்காத்தானின் முக்கிய அச்சுறுத்தலாகக் கருதப்படும்

மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் பாரிசான் நேஷனல் (BN) தனது சொந்தச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தால், அதற்குப் பக்காத்தான் ஹராப்பான் (PH) அல்ல, மாறாக பெரிக்காத்தான் நேஷனல் (PN) தான் முக்கியப் போட்டியாளராக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியாக பாரிசானின் கோட்டைகளாகத் திகழும் இந்த இரு மாநிலங்களிலும், பாரிசானுக்குக் கூடுதல் சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக இல்ஹாம் மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹிசோமுதீன் பக்கார் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹிசோமுதீன் பக்கார்

“பெஜுவாங் மற்றும் பெர்ஜாசா போன்ற பிற மலாய் சார்ந்த கட்சிகளுக்கு இந்த இரு மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை. அதேசமயம், பக்கத்தான் ஹராப்பான் கட்சிக்கான ஆதரவு பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே குவிந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

“இருப்பினும், கூட்டணிக் கட்சிகளான பாஸ் மற்றும் பெர்சாத்து இடையேயான மோதல்கள் மற்றும் பெர்சாத்து கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவப் பிரச்சனைகள் உள்ளிட்ட உள்விவகாரங்களால் பெரிக்காத்தான் நேசனல் பலவீனமடைந்துள்ளது. கிழக்குக் கரை மற்றும் வட மாநிலங்களைப் போல மலாக்கா மற்றும் ஜொகூரில் பாஸ் கட்சியின் கட்டமைப்பு வலுவாக இல்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா மற்றும் ஜொகூர் தேர்தல்களில் பாரிசான் நேஷனல் தனது சொந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற ஆலோசனையை மார்ச் 7 அன்று மஇகா தலைவர் வீ கா சியோங் முன்வைத்தார். இக்கூட்டணி புதிய மக்கள் ஆணையைப் பெறுவது நியாயமானது என்று அவர் கூறினார்.”

அஸ்மி ஹசன்

அகாடமி நுசந்தாராவின் அஸ்மி ஹசன் கூறுகையில், “தனித்துப் போட்டியிட்டால், அதன் வாக்குகள் பக்கத்தான் ஹராப்பானுடன் பிரியும். இது பெரிக்காத்தான் நேசனலுக்கு சாதகமாக அமையும்” என்றார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக பக்கத்தான் உடனான மோதல்களே பாரிசானை தனித்துப் போட்டியிடத் தூண்டும் காரணியாக இருக்கலாம் என்று அஸ்மி கூறினார். ‘உதாரணமாக, மலாக்காவில் பக்கத்தான் 14 இடங்களைக் கோருகிறது, இது சாத்தியமற்றது என்று நான் கூறுவேன். ஏனெனில் கடந்த தேர்தலில் மலாக்கா அம்னோ 21 இடங்களில் வெற்றி பெற்றது. 7 இடங்களை பக்கத்தானுக்கு விட்டுக் கொடுப்பது அம்னோவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும்,’ என்று அவர் தெரிவித்தார்.

 

-fmt