ஹரி ராயாவை முன்னிட்டு பிரதமர் மேலும் பல நற்செய்திகளை அறிவிக்க உள்ளார் – பிரதமர் அலுவலகம்

மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) அவர்கள், வரவிருக்கும் ஹரி ராயா ஐதில்பித்ரி (Aidilfitri) திருநாளை முன்னிட்டு மக்களுக்கு மேலும் சில நல்ல செய்திகளை அறிவிப்பார் என்று பிரதமர் அலுவலகம் (PMO) தெரிவித்துள்ளது.

பிரதமரின் மூத்த ஊடக செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா தெரிவித்ததாவது, இன்று காலை பிரதமர் அன்வார், சியாவல் (Syawal) பண்டிகைக்கு முன் மக்களின் சுமையை குறைக்க மடானி அரசாங்கம் ஏழு உடனடி தலையீட்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளில், Sumbangan Tunai Rahmah (STR) உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத் தொகையை நாளை முதல் முன்கூட்டியே வழங்குவது, 2026 சிறப்பு நிதி உதவித் தொகையை அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு வழங்குவது, நாடு முழுவதும் Rahmah Madani Sales Programme (ரஹ்மா மதானி விற்பனை திட்டம்) விரிவாக்கம் செய்வது, மேலும் FlySiswa என்ற சலுகை விமான டிக்கெட் திட்டத்தை விரிவுபடுத்துவது போன்றவை அடங்கும்.

“மடானி அரசாங்கம், மக்களின் நலன் எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, மேலும் நியாயமான, வளமான மற்றும் கருணையுள்ள நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் தனது முழு முயற்சியையும் தொடரும்”.

“ஹரி ராயா ஐதில்ஃபித்ரி கொண்டாட்டத்திற்கு முன் மக்களுக்கு மேலும் சில நல்ல செய்திகளையும் பிரதமர் விரைவில் அறிவிப்பார்,” என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற பிரதமர் அலுவலக (PMO) விளக்கக் கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி அன்வாரின் முகநூல் பக்கத்திலும் PMO Malaysia பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

மேலும், அறிவிக்கப்பட்ட அனைத்து உதவித் திட்டங்களும் முயற்சிகளும் மக்களுக்கு நிவாரணமாக அமையும் என்று பிரதமர் அலுவலகம் நம்புகிறது, குறிப்பாக வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை சமாளிக்கவும், ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்திற்கான தயாரிப்புகளிலும் உதவியாக இருக்கும் என நஷ்ருல் தெரிவித்தார்.