ஊழலிலிருந்து விடுபட்ட அரசாங்கத்தை அமைப்பதாக பக்காத்தான் வாக்குறுதி

பக்காத்தான் ராக்யாட்டின் உயர் நிலைத் தலைமைத்துவம் உள் வலிமையை ஒருமுகப்படுத்திக் கொள்ளவும் எதிர்த்தரப்புக் கூட்டணியின் போராட்டத்தை சீர்குலைக்கக் கூடிய எல்லா வகையான ஊழல்களிலிருந்து விலகியிருக்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.

நேற்று ஈராயிரம் பேர் கூடியிருந்த பக்காத்தான் மாநாட்டில் டிஏபி, பிகேஆர், பாஸ் தலைவர்கள் தங்களது கரங்களை உயர்த்தி ஐந்து வாக்குறுதிகளையும் உரத்த குரலில் வாசித்தனர்.

அதற்கு முன்னதாக நாட்டில் அடிப்படை நீதியும் ஜனநாயகமும் வீழ்ச்சி கண்டு வருவதாக அவர்கள் வருத்தத்துடன் கூறினர்.

மலேசியர்கள் நாட்டின் வளப்பத்தை அனுபவிக்க முடியாமல் ஒதுக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் வருவது குறித்தும் அவர்கள் வருத்தம் தெரிவித்துக் கொண்டனர்.

“ஆகவே பக்காத்தான் ராக்யாட் ஆதரிக்கும் நாங்கள் ஜனநாயகமான, நியாயமான, பரிவுடைய புதிய மலேசியாவை நிர்மாணிக்க முழுமையாக வாக்குறுதி அளிக்கிறோம்.”

கூட்டரசு அரசமைப்பைத் தற்காப்பது, பொதுச் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவது, பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவை மற்ற வாக்குறுதிகளில் அடங்கும்.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில், அந்தக் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி, மகளிர் தலைவு பூஸியா சாலே, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அந்தக் கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங், பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கட்சியின் துணைத் தலைவர் முகமட்  சாபு, உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் ஆகியோர் வாக்குறுதி எடுத்துக் கொண்ட தலைவர்களில் அடங்குவர்.