நீக்கப்பட்டதை எதிர்த்து ஹசான் அலி முறையீடு செய்ய மாட்டார்

பாஸ் கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்யுமாறு ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்ட போதிலும் தாம் அவ்வாறு செய்யப் போவதில்லை என முன்னாள் பாஸ் சிலாங்கூர் ஆணையாளர் ஹசான் அலி கூறியிருக்கிறார்.

மதமாற்றத்தை எதிர்க்கும் ஹிம்புன் என்னும் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வில் அவர் நேற்றிரவு பேசினார். அவரது உரையை சினார் ஹரியான் இன்று வெளியிட்டுள்ளது.

பாஸ் கட்சி தனது போராட்டத்திற்கு துரோகம் செய்து விட்டதாகத் தாம் கருதுவதால் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார் அவர்.

“என்னால் முடியாது. அந்தக் கட்சியில் தொடர்ந்து இருக்க என மனச்சாட்சி அனுமதிக்காது. நான் ஏன் அந்தக் கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கான காரணம் எதனையும் காணவில்லை,” என்றும் அவர் சொன்னதாக அந்த மலாய் நாளேடு குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம்களுடைய சமய நம்பிக்கையை பாதுகாப்பதற்குத் தாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சிலாங்கூர் பாஸ் தடையாக இருப்பதாகவும் ஹசான் குற்றம் சாட்டினார்.

“எனது கட்சித் தோழர்களும்  குறிப்பிட்ட சில ஒட்டுண்ணிகளும் ஆதரவைப் பெற விரும்புவதால் மதுபானம், மதமாற்றம் போன்ற விஷயங்களை பெரிதுபடுத்தக் கூடாது என விரும்புகின்றனர்.”

“ஆட்சி மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதற்கும் அந்தப் பதவியால் கிடைக்கும் நன்மைகளை இழக்கவும் நான் தயாராக இருக்கிறேன். நான் என் பதவியில் சௌகரியமாக இருந்தாலும் என்னையும் என் குடும்பத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்றுவதற்காக நான் அதனைக் கை விடுகிறேன்,” என்றும் ஹசான் அலி கூறினார்.