புரோட்டோன், டிஆர்பி-ஹைகோம் பங்கு வாணிகம் நிறுத்தப்பட்டது

தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், பெரிய தொழில் நிறுவனமான டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட் ஆகியவற்றின் பங்கு வாணிகம் அறிவிப்பு விடுக்கப்படுவதற்காக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புர்சா மலேசியா பங்குச் சந்தைக்கு இன்று அனுப்பிய கடிதத்தில் அந்த இரு நிறுவனங்களும் மேல் விவரங்களத் தெரிவிக்கவில்லை.

மிகவும் கணிசமான பங்குகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையைக் கொண்ட நிறுவன நடவடிக்கையைத் தான் மேற்கொள்ளவிருப்பதால் வாணிகம் நிறுத்தப்பட வேண்டும் என டிஆர்பி-ஹைகோம் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.

புரோட்டோனில் உள்ள தனது 42.7 விழுக்காடு பங்குகளை ஒரு பங்கு 6 ரிங்கிட் என்னும் விலைக்கு கையகப்படுத்தும் முயற்சியில் டிஆர்பி-ஹைகோம் வெற்றி பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் முதலீட்டுக் கரமான கஸானா நேசனல் பெர்ஹாட் இன்று அறிவிக்கும் எனக் கடந்த வாரம் கூறப்பட்டது.

அந்த விற்பனையில் சம்பந்தப்பட்ட மொத்த தொகையின் மதிப்பு 1.4 பில்லியன் ரிங்கிட் ஆகும்.

கடந்த வெள்ளிக்கிழமை புரோட்டோன் பங்கு விலை 5 ரிங்கிட் 18 சென் -ஆகவும்  டிஆர்பி-ஹைகோம் பங்கு விலை 2 ரிங்கிட் 17 சென் -ஆகவும் முடிந்தன.

பெர்னாமா