பயிற்சி மருத்துவர்களின் 85 மணி நேர வார வேலை குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, அமைச்சர் புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதாக கூறினார்.

சுகாதார அமைச்சு வரும் காலங்களில் பயிற்சி மருத்துவர்களுக்கான (House Officers) வேலை நேர வரம்புகள் குறித்த சுற்றறிக்கையை வெளியிடும்.

மலேசிய பயிற்சி மருத்துவர்கள் வாரத்திற்கு 65 முதல் 85 மணிநேரம் வேலை செய்வதாக மலேசிய மெடிக்ஸ் இன்டர்நேஷனல் (Malaysian Medics International) அறிக்கை ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் சுல்கேப்ளி அகமது தெரிவித்தார்.

“பயிற்சி மருத்துவர்களின் வேலை நேரத்துடன் தொடர்புடைய விஷயங்களை வலுப்படுத்த ஒரு புதிய வழிகாட்டுதல் சுற்றறிக்கை வெளியிடப்படும், மேலும் இந்த விவகாரம் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் மகாதர் அப்துல் வஹாப்பின் கவனத்தைப் பெற்றுள்ளது,” என்று அவர் கூறினார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 5வது வருடாந்திர கிளினிக்கல் ரிசர்ச் மலேசியா ட்ரையல் கனெக்ட் மாநாடு 2026 (5th Annual Clinical Research Malaysia Trial Connect Conference 2026) தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார நிலையங்களில் உள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப, தற்போதுள்ள நெகிழ்வான வேலை நேர முறையை இந்தச் சுற்றறிக்கை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுல்கேப்ளி கூறினார்.

மலேசிய மாணவர்களை பாதிக்கும் இங்கிலாந்து கொள்கை மாற்றம்

மற்றொரு நிகழ்வில், யுனெடட் கிங்டம் (UK) மருத்துவப் பயிற்சி (முன்னுரிமை) சட்டம் 2026-ஐ (Medical Training (Prioritisation) Act 2026) அமல்படுத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கொள்கை மாற்றங்களை மலேசிய மருத்துவக் கவுன்சில் (MMC) ஆய்வு செய்யும் என்று அமைச்சர் கூறினார். இந்தச் சட்டம் அடிப்படைத் திட்டத்திற்கான (Foundation Programme – FY1/FY2) நுழைவுத் தேவைகளை மாற்றுகிறது.

இந்தக் கொள்கை அமலாக்கத்தால் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ள நியூகாஸில் பல்கலைக்கழக மருத்துவ மலேசியாவின் (NUMed Malaysia) சுமார் 850 மலேசிய மருத்துவ மாணவர்களுக்கு, MMC தலைவராக இருக்கும் மகாதர் தீர்வு காண்பார் என்று அவர் கூறினார்.

“மலேசியாவில் மருத்துவப் பட்டதாரிகளுக்கான பதிவு மற்றும் அங்கீகார செயல்முறையானது மருத்துவச் சட்டம் 1971-ன் விதிகள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை MMC வலியுறுத்த விரும்புகிறது”.

“பதிவு, பயிற்சி மற்றும் தொழில்முறை தகுதிகள் தொடர்பான அனைத்து முடிவுகளும் MMC-ஆல் நிர்ணயிக்கப்பட்ட சட்டரீதியான தேவைகள் மற்றும் தரநிலைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன,” என்று சுல்கிஃப்ளி கூறினார்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் மகாதர் அப்துல் வஹாப்.

சட்டப்பூர்வ நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும் போது, மருத்துவச் சட்டம் 1971-ன் இரண்டாவது அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவத் தகுதிகள் மலேசியாவில் பதிவு நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

ஒரு ஒழுங்குமுறை அமைப்பாக, மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருத்துவப் பயிற்சியாளர்களும் திறன், நிபுணத்துவம் மற்றும் நோயாளர் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்கிறார்கள் என்பதை உறுதி செய்வதில் MMC உறுதியாக உள்ளது.

புதிய விதிமுறைகளின் கீழ், யுனெடட் கிங்டம் இல் நேரடியாகத் தங்கிப் பயின்று பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதனால் மலேசியாவில் தங்கள் படிப்பை முடிக்கும் NUMed மலேசிய மாணவர்கள், சர்வதேச மருத்துவப் பட்டதாரிகள் (International Medical Graduates) பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.