முக நூல் சர்ச்சை: யூஎஸ்எம் மாணவர் போலீஸ் ஜாமீனில் விடுதலை

நிபோங் திபாலுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கொண்டு செல்லும் ஹெலிகாப்டருக்குக் குண்டு வைக்கப் போவதாக மருட்டியதாக கூறப்படுவது தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் தேர்வுகளை எழுதுவதற்கு உதவியாக போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இளைஞராகவும் எதிர்கால வல்லுநராகவும் விளங்கும் அந்த யூஎஸ்எம் கட்டுமானப் பொறியியல் மாணவருக்குத் தாம் தேர்வு எழுத வாய்ப்புக் கொடுக்க விரும்புவதாக பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அயூப் யாக்கோப் கூறினார்.

24 வயதான ஜனார்த்தனா சந்திரா என்ற அந்த மாணவர் நேற்றிரவு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். என்றாலும் “நஜிப் நமது வளாகத்துக்கு வருகிறார். அவரது ஹெலிகாப்டருக்குக் குண்டு வைப்போம்” என்ற அவரது முக நூல் பதிவு குறித்த விசாரணையில் உதவுவதற்காக அவர் மீண்டும் ஒரு மாதத்தில் போலீஸிடம் வர வேண்டும்.”

அவருக்கு எதிராக மூன்று போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. குற்றவியல் சட்டத்தின் 506வது பிரிவின் கீழ் கிரிமினல் அச்சுறுத்தலுக்காக அவர் விசாரிக்கப்படுகிறார்.

அந்த இளைஞரையும் சீருடை அமைப்பு ஒன்றைச் சேர்ந்த அவரது தந்தையையும் தாம் சந்தித்தாகவும் அயூப் சொன்னார். தமது நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருக்குமாறும் மாணவருக்கு அயூப் அறிவுரை கூறியுள்ளார்.

“நான் நேற்றிரவு 9 மணி முதல் 11.30 வரையில் அந்த மாணவருடன் பேசினேன். தாம் செய்தது தவறு என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தமது முக நூல் பதிவு அந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை என அவர் சொன்னார்,” என அயூப் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

“அவர் நான்காம் ஆண்டு பொறியியல் மாணவர். அவர் ஆறாம் வகுப்பிலோ முதல் படிவத்திலோ இல்லை. நிச்சயமாக நாங்கள் அதனைக் கடுமையாகக் கருதுகிறோம். இதில் அரசியல் ஏதுமில்லை. இது போலீஸ் விவகாரம். நாங்கள் அதனைக் கையாள விட்டு விடுங்கள்.”

நேற்று பிற்பகல் பல்கலைக்கழக வளாகத்தில் கைது செய்யப்பட்ட ஜனார்த்தனா பட்டாணி சாலையில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்துக் கொண்டு செல்லப்பட்டார்.

பொது மக்கள் பேச்சு சுதந்திரத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருப்பதோடு சிந்தனையில்லாமல் செயல்படவும் கூடாது என அவர் எச்சரித்தார்.

“அரசியல் வேறுபாடுகளுக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாம் நாட்டை மேம்படுத்த அரசியலைப் பயன்படுத்துவோம். நாம் நாட்டு நன்மைக்காக போராடுவதால் நாம் அனைவரும் வீரர்களாக இருப்போம்,” என அயூப் மேலும் சொன்னார்.