‘தாய்ப் பால் வங்கியை’ அமைக்கும் யோசனையை இஸ்லாமிய விவகாரங்களுக்கான தேசிய பாத்வா மன்றம் நிராகரித்துள்ளது. அத்தகைய ‘வங்கி’ ஹராம் என்றும் அது பிரகடனம் செய்தது.
குறிப்பிட்ட மாது ஒருவரால் தாய்ப் பால் புகட்டப்படும் சிசுக்கள் “கலப்பு இன வம்சாவளியை” தோற்றுவித்து விடக் கூடும் என கலந்துரையாடல் நிகழ்வின் போது அந்த முடிவைச் செய்த பாத்வா மன்றம் கூறியது.
அந்த விவரங்களை இன்று பெரித்தா ஹரியான் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்கள் தாங்கள் ஒருவரை மணம் புரியும் போது ஹராமான நடவடிக்கைகளினால் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதால் முஸ்லிம்களிடையே உறுதியற்ற நிலையையும் அது உருவாக்கி விடும் என்று அந்தச் செய்தி குறிப்பிட்டது.
“நிபுணர்களுடன் ஆலோசித்த பின்னரும் சமர்பிக்கப்பட்ட வாதங்களை செவிமடுத்த பின்னரும் ஒருவருடைய இன வம்சாவளியைப் பாதுகாப்பது இஸ்லாத்தின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாக இருப்பதால் அதனை நிலை நிறுத்த வேண்டும் என அந்தக் கலந்துரையாடல் முடிவு செய்துள்ளது. ஆகவே அந்த வம்சாவளியைப் பாதிக்கக் கூடிய எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்பட வேண்டும்.”
“தாய்ப்பால் வங்கியைத் தோற்றுவிப்பது அந்த விதிகளுடன் தொடர்புடையது என கலந்துரையாடல் கருதுகிறது. அதனால் அது ஹராம் ஆகும். காரணம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களினால் தாய்ப் பால் புகட்டப்படும் சிசுக்கள் ” தாய்ப் பால் உடன் பிறப்புக்களாக” மாறிவிடும். சிசுக்களுக்கு இடையிலான திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது,” என பாத்வா மன்றம் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி குறிப்பிட்டது.
என்றாலும் தாய்ப் பால் கிடைக்காத சூழலில் உள்ள சிசுக்களுக்கு அந்த நடைமுறை தேவை என்பதை மன்றம் ஏற்றுக் கொள்கிறது.
ஒன்றுக்கொன்று அறிமுகமான குடும்பங்களுக்கு இடையில் விருப்பமுள்ள தாய்மார்களின் பங்கேற்புடன் அது நடைபெற வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.