குழந்தை காப்பாளர் வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 7 மாத குழந்தை மரணம்

காவல்துறையினர் கூறுவதாவது, அந்தச் சிசு தொட்டிலில் தூங்க வைக்கப்பட்டு, சிலிகான் பாசிபையர் (pacifier) கொடுக்கப்பட்ட பிறகு மயக்கநிலையிலில் கண்டுபிடிக்கப்பட்டது.

அசாஹர் அப்துல் ரஹீம் கூறுகையில், குழந்தை பராமரிப்பாளர் அலட்சியம் காட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்தார்.

கடந்த இரவு நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ செண்டாயானில் உள்ள ஒரு வீட்டில், குழந்தை காப்பாளர் (babysitter) ஒருவரின் பராமரிப்பில் இருந்த ஏழு மாத ஆண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தது.

சிரம்பான் காவல் நிலையத் தலைவர் அஸஹர் அப்துல் ரஹீம் கூறுகையில், 30 வயது மதிக்கத்தக்க காப்பக ஆசிரியையான குழந்தையின் தாய், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தார். குழந்தை பராமரிப்பாளர், குழந்தையை மயக்க நிலையில் கண்டெடுத்து இரவு 10 மணிக்கு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகத் தன்னிடம் கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“பின்னர் குழந்தை துங்கு ஜாஃபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் குழந்தைக்கு அவசர இதய-சுவாச மீட்புப் பயிற்சியை (CPR) மேற்கொண்டார். எனினும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார்”.

“விசாரணையில், அக்குழந்தை கடந்த டிசம்பர் மாதம் முதல், 30 வயது மதிக்கத்தக்க  பெண் காப்பாளரின் பராமரிப்பில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது”.

“சம்பவத்தின் போது, குழந்தை ஒரு தொட்டிலில் தூங்க வைக்கப்பட்டு, அதற்கு ஒரு சிலிகான் சூப்பியும் (silicone pacifier) கொடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அஸஹார் கூறினார். இதற்கிடையில், அலட்சியமாக இருந்ததாகக் கூறி, 2001 ஆம் ஆண்டு குழந்தைச் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அந்தப் பெண் காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.