பாஸ் கட்சியிலிருந்து தாம் இம்மாதத் தொடக்கத்தில் நீக்கப்பட்டது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் உருவாக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்பவும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி கூறுகிறார்.
“எனது நீக்கம் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. நான் என்னைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை,” என அவர் இன்று கோலாலம்பூரில் தமது இல்லத்தில் நிருபர்களிடம் கூறினார்.
“அது சர்வாதிகாரமானது. ஜனநாயகத்துக்கு புறம்பானது. ஒர் அமைப்பை நிர்வாகம் செய்யும் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முரணானது.”
தமது அறிக்கைகளுக்கும் தாம் நீக்கப்பட்டதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என மீண்டும் வலியுறுத்திய ஹசான், ஜனவரி 9ம் தேதி குதப்புணர்ச்சி வழக்கு தீர்ப்பு தொடர்பில் அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவான 901 பேரணிக்குத் தாம் எதிர்ப்புத் தெரிவித்ததும் பிகேஆர் நெருக்குதலுமே அதற்குக் காரணங்கள் என்றார்.
ஹசான் கட்சியின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஜனவரி 8ம் தேதி அவரை பாஸ் மத்தியக் குழு கட்சியிலிருந்து நீக்கியது.
வழக்கமான கட்டொழுங்கு விதிகளுக்கு ஏற்ப அவர் நீக்கப்படவில்லை என்பதையும் மத்தியக் குழு விளக்கியுள்ளது.
சிறப்பு சூழ்நிலைகளில் அல்லது பெரிய தவறுகள் நிகழும் போது ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்குச் செல்லாமல் நேரடியாக உறுப்பினர்களைத் தண்டிப்பதற்கு மத்தியக் குழுவுக்கு அனுமதி அளிக்கும் கட்சி அமைப்பு விதிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 82(9)பிரிவின் கீழ் ஹசான் அலி நீக்கப்பட்டதாக அது கூறியது.