தத்தெடுத்த பெண் குழந்தையின் மரணத்திற்கு காரணமான இல்லத்தரசிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

சிட்டி சுப்ரீனா இம்ரான், 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சேராஸ், ஜாலான் ஸ்ரீ பெர்மைசுரியில் உள்ள ஒரு காண்டோமினியம் குடியிருப்பு வீட்டில் குழந்தைக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

சிட்டி சுப்ரினா இம்ரான் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு தத்தெடுத்த ஏழு மாத பெண் குழந்தையை தொடர்ந்து துன்புறுத்தி உயிரிழக்கச் செய்த குற்றத்திற்காக, இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, ஒரு இல்லத்தரசி நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க உடைந்து அழுதார்.

நீதிபதி சித்தி ஷகிரா மொஹ்தருடின், குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 39 வயதான சித்தி சுப்ரீனா இம்ரானுக்கு இந்தத் தண்டனையை விதித்தார். மேலும், 2025 ஜூலை 31 அன்று அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்தே சிறைத்தண்டனை அமலுக்கு வரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2025 ஜூலை 29 இரவு 10 மணி முதல் ஜூலை 30 காலை 7 மணி வரை, சேராஸ், ஜாலான் ஸ்ரீ பெர்மைசுரியில் உள்ள ஒரு காண்டோமினியம் வீட்டில், தத்தெடுத்த ஏழு மாத குழந்தையின் மரணத்திற்கு காரணமானதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு, மலேசிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304(a)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

வழக்கின் விவரங்களின்படி, குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறை  சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அறையில் இருந்த குழந்தை தொட்டிலில் பாதிக்கப்பட்ட சிறுமி மல்லாந்து அசையாமல் கிடப்பதைக் கண்டனர்.

மருத்துவ பரிசோதனையில், குழந்தையின் முகம் மற்றும் உடலின் பல பகுதிகளில் காயங்களும் இரத்தக் கசிவினால் ஏற்பட்ட அடிபட்ட தடயங்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் குழந்தையை கிள்ளுதல், அறைதல் மற்றும் கடித்தல் போன்ற பல்வேறு உடல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. மேலும், அவர் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளை புகைத்து, அதன் புகையை குழந்தையின் வாயில் ஊதியதாகவும் வழக்கு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது கணவருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்திகளையும் காவல்துறையினர் மீட்டனர். அவற்றில் ஒன்றில், ‘அந்தக் குழந்தையை நான் அடித்ததால் உடல் முழுவதும் காயங்களுடன் உயிர் பிழைக்கும் நிலையிலேயே விட்டுவிட்டேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.”

அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாஃபா ஸைனல் அபிதின், ஏழு மாத குழந்தை முழுமையாக பெரியவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பையே சார்ந்திருந்த நிலையில், அவளது மரணத்துக்கு காரணமான இந்தக் குற்றத்திற்கு கடுமையான மற்றும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது:

“பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவரே, அந்தக் குழந்தையின் துன்பத்திற்கும் மரணத்திற்கும் காரணமாகிவிட்டார்”.

“குழந்தையின் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட உடல் துன்புறுத்தல்கள், இது திட்டமிட்ட செயல் என்பதை வெளிப்படுத்துகின்றன. குழந்தை துன்புறுத்தலால் மரணம் ஏற்பட்டால், அதை நீதிமன்றம் எளிதாக எடுத்துக்கொள்ளாது என்ற தெளிவான செய்தியை இந்தத் தண்டனை குற்றவாளிக்கும் சமூகத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.”

தண்டனையைக் குறைக்கக் கோரி தனது தரப்பில் வாதிட்ட சித்தி சுப்ரீனா, வழக்கறிஞர் இல்லாமல் ஆஜராகி, இதய நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை தனக்கு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கண்ணீர் மல்க அவர், “என் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்,” என்று கூறினார்.