2017ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தில் (சட்டம் 792) முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தம், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில், குற்றங்கள் வெளிநாட்டில் செய்யப்பட்டிருந்தாலும் கூட, மலேசியா எந்தவொரு அதிகார வரம்பு எல்லைகளையும் எதிர்கொள்ளக் கூடாது என்பதை உறுதிப்படுத்த முயல்கிறது.
பாதிக்கப்படக்கூடிய சிறார்களை எல்லை கடந்த பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சிகளை வலுப்படுத்துவதோடு, மாறிவரும் பாலியல் குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப இந்தச் சட்டம் பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்யவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அசலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
குற்றம் வெளிநாட்டில் நடந்தது என்பதற்காகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் மலேசியாவின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவர் என்பதற்காகவோ பாதுகாப்பு நிறுத்தப்படக் கூடாது என்று அரசாங்கம் கருதுகிறது, என்று நாடாளுமன்ற மக்கள் அவையில் இன்று சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (திருத்த) மசோதா 2026-ஐ இரண்டாம் வாசிப்புக்காக தாக்கல் செய்தபோது அவர் கூறினார்.
இது தொடர்பாக, சட்டம் 792-இன் பிரிவு 3-இன் எல்லை கடந்த அதிகார வரம்பை விரிவுபடுத்துவதற்காக, இந்த மசோதா ஒரு திருத்தத்தை முன்மொழிகிறது என்று அவர் கூறினார்.
தற்போதுள்ள விதிகளின்படி, பிரிவு 3 மலேசியக் குடிமக்களால் வெளிநாட்டில் செய்யப்படும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும், ஆனால் இந்தத் திருத்தம் அதன் வரம்பை நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் மலேசியாவில் சாதாரணமாக வசிக்கும் நபர்களுக்கும் விரிவுபடுத்த முயல்கிறது.
அதே நேரத்தில், மலேசியக் குடிமக்களாகவோ, நிரந்தரக் குடியிருப்பாளர்களாகவோ அல்லது மலேசியாவில் சாதாரணமாக வசிப்பவர்களாகவோ இருக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.
2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இன்டர்நெட் வாட்ச் பவுண்டேஷனின் தரவுகளின்படி, மலேசியக் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் குறித்த 16,238 புகார்கள் 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இது முந்தைய ஆண்டை விட 225%-க்கும் அதிகமான அதிகரிப்பு என்றும் அஸலினா கூறினார்.
2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 12,656 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள், குழந்தைகளுக்கான அச்சுறுத்தல் இனி பௌதீக இடங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும், அது டிஜிட்டல் சூழலிலும் எல்லைகளுக்கு அப்பாலும் பெருகி வளர்ந்து வருகிறது என்பதையும் காட்டுகின்றன, என்று அவர் கூறினார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், மூடிய தளங்களின் பயன்பாடு, குறியாக்கத் தொழில்நுட்பம், போலி அடையாளங்கள் மற்றும் எல்லை தாண்டிய செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதால், மேலும் மேலும் சிக்கலாகி வருவதாகவும், இதனால் குற்றங்களைக் கண்டறிவதும் வழக்குத் தொடர்வதும் கடினமாகி வருவதாகவும் அவர் கூறினார்.சிறார்கள் தாங்களாகவே தங்களை பாதிக்கப்பட்டவர்களாகத் தேர்ந்தெடுப்பதில்லை. எனவே, கடுமையான, நவீன மற்றும் பயனுள்ள சட்டங்களின் மூலம் அவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது நமது கூட்டுப் பொறுப்பாகும், என்று அவர் கூறினார்.
-fmt
























