அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்கள் 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை எதிர்நோக்கலாம்

அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்களான பாப்பாகோமோ, பார்புக்காரி ஆகியோர் வணிகரான அப்துல் ரசாக் முகமட் நூர் மீது அவதூறு கூறியதாக கூறப்படுவதின் தொடர்பில் ஒவ்வொருவரும் 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை எதிர்ந்நோக்குகின்றனர்.

நெட்டோ அண்ட் கோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக ஜனவரி மாதம் மூன்றாம் தேதி கோரிக்கைக் கடிதம் ஒன்றை அந்த இருவருக்கும் அப்துல் ரசாக் அனுப்பியுள்ளார். கடந்த சனிக்கிழமை உள்ளூர் நாளேடு ஒன்றில் கடந்த சனிக்கிழமை அந்த கோரிக்கை நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

தமது கட்சிக்காரருக்குத் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு வேறு வழிகள் இல்லாததால் பொது நோட்டீஸ்களை நாடியதாக அப்துல் ரசாக்கின் வழக்குரைஞரான ரூபன் நெட்டோ கூறினார்.

“நீதிபதியின் முன்பு ஆஜராகும் போது வலைப்பதிவாளர்களை அடையாளம் காண எங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்து விட்டோம் என நாங்கள் சொல்ல விரும்புகிறோம்,” என அவர் சொன்னார்.

பாப்பாகோமோ வலைப்பதிவின் உரிமையாளர் வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் என்றும் பார்புக்காரி வலைப்பதிவுக்கு முகமட் சலிம் இஸ்காண்டார் உரிமையாளர் என்றும் அந்த நோட்டீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது,

2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி பாப்பாகோமோ ஒரு வலைப்பதிவு மூலமும் பார்புக்காரி 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி வலைப்பதிவு மூலமும் தமக்கு எதிராக அவதூறு கூறியதாக அப்துல் ரசாக் அந்த நோட்டீஸ்களில் குறிப்பிட்டுள்ளார்.

“தமது கட்சிக்காரரை மோசடிக்காரர் என்றும் அரசாங்கத்தை ஏமாற்றினார் என்றும் எதிர்த்தரப்புடன் ஒத்துழைத்தார் என்றும் அம்னோவுக்கு அவர் நன்றியுடன் நடந்து கொள்ளவில்லை என்றும் கூறியதின் வழி அவர் மீது அந்த இரு வலைப்பதிவாளர்கள் அவதூறு கூறினர்,” என நெட்டோ சொன்னார்.

டெலிகோம் மலேசியாவுடன் இணைந்து அகண்ட அலைக்கற்றை, துணைக்கோளச் சேவைகளுக்கான அனுமதிகளை அப்துல் ரசாக் வைத்திருப்பதால் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுக் கோரிக்கை நியாயமானது என்று நெட்டோ சொன்னார்.

“அந்த அவதூறான கட்டுரைகள் காரணமாக வங்கிகளும் டெலிகோமும் என் கட்சிக்காரரை அழைத்து என்ன நடக்கிறது என விசாரித்துள்ளன.”

விரைவில் நீதிமன்ற நடவடிக்கை

“இந்த வார இறுதிக்குள் அவர்கள் தங்கள் கட்டுரைகளை மீட்டுக் கொள்ளாவிட்டால் நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கை சமர்பிக்க வேண்டியிருக்கும்,” என நெட்டோ மேலும் கூறினார்.

பாப்பாகோமோ கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய பல கூற்றுக்களை வெளியிட்டுள்ளார். பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் புதல்வர் சக மாணவி ஒருவரை மானபங்கப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் அதில் ஒன்றாகும். பின்னர் அந்தக் கூற்று உண்மையில்லாதது என மெய்பிக்கப்பட்டது.

அந்த வலைப்பதிவாளருக்கு எதிராக ஏற்கனவே பல போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. என்றாலும் இந்த வழக்கு அவருக்கு எதிராகவும் பார்புக்காரிக்கு எதிராகவும் போடப்படும் பெரிய வழக்காக இருக்கும் எனத் தெரிகிறது.