Radio Free Sarawak (RFS) என அழைக்கப்படும் இரகசிய வானொலி நிலையம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறது. அது தன்னுடன் தொடர்பு கொள்வதற்கு அது உள்ளூர் தொலைபேசி எண் ஒன்றையும் வழங்கியுள்ளது.
“தேர்தல் காலத்தின் போது நேயர்கள் நேரடியாக எங்களுடன் தொடர்பு கொண்டு பிரச்னைகளைத் தெரிவிப்பதும் கருத்துக்களை கூறுவதும் முக்கியம்,” என அந்த வானொலி நிலையத்தை தோற்றுவித்த கிளார் ரியூகாஸல் பிரவுன் கூறினார். அவர் தகவல்களை அம்பலப்படுத்தும் சரவாக் ரிப்போர்ட் என்னும் இணையத் தளத்தையும் நடத்தி வருகிறார்.
13வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு மார்ச் மாதம் அல்லது ஜுன் மாதம் நிகழும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அந்த வானொலி நிலையம் நாளை மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இபான் மொழி பேசும் கிறிஸ்டினா சுந்தாய் புதிய அறிவிப்பாளராகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த நிலையத்தில் பணி புரிந்த பாப்பா ஒராங் உத்தான் என்னும் புனை பெயரைக் கொண்ட பீட்டர் ஜான் ஜாபான் மீண்டும் திரும்புகிறார்.
நாளை அந்த நிலையம் ஒலிபரப்பைத் தொடங்கும் போது “சரவாக்கைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்தும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
சிற்றலை 15420 kHzல் மாலை மணி 6 தொடக்கம் இரவு எட்டு மணி வரை அந்த வானொலி ஒலிபரப்பை மேற்கொள்ளும்.
RFS முதலமைச்சர் அப்துக் தாயிப் மாஹ்முட் -டை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. கிராமப் புற சரவாக் மக்களை நோக்கமாகக் கொண்டு அந்த வானொலி இயங்குகிறது.
சுதேசி பாரம்பரிய நில உரிமைகள் பற்றிய பிரச்னைகளை அது கடந்த காலத்தில் வெளியிட்டுள்ளது. தாயிப்பின் அனைத்துலக வர்த்தகம் ஊழல் மலிந்தது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.
அண்மைய சரவாக் தேர்தல்களுக்கு முன்னர் அந்த நிலையத்தின் ஒலிபரப்பை பெல்ஜிய நிறுவனம் ஒன்று தடுத்தது. அதற்காக அந்த நிறுவனத்துக்கு 108,000 அமெரிக்க டாலர் கொடுக்கப்பட்டதாக ரியூகாஸல் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.