வெளிநாடுகளில் நடக்கும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மீதான அதிகார வரம்பை விரிவாக்கும் மசோதா நிறைவேற்றம்

மலேசியாவிற்கு வெளியேயும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான மலேசியாவின் சட்ட வரம்பை விரிவாக்குவதற்கான ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (திருத்தச்) சட்டம் 2026 மக்களவையில் இன்று நிறைவேறியது.

மலேசியாவில் வெளிநாட்டுப் பிரஜைகள் சம்பந்தப்பட்ட குழந்தைகள் பாலியல் குற்ற வழக்குகள் 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் 117% அதிகரிப்பை பதிவு செய்துள்ளதால் இந்தத் திருத்தம் மிகவும் முக்கியமானது என்று சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தத்துறை துணை அமைச்சர் எம்.குலசேகரன் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 2021-இல் 1,095 ஆக இருந்தது, கடந்த ஆண்டில் (2025) 2,385 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

வெளிநாட்டுச் சந்தேக நபர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தைக் காட்டியுள்ளது; இது 2021-இல் 67 ஆக இருந்தது, 2025-இல் 148 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியா, வங்களாதேசம், மியான்மர் மற்றும் பாக்கிஸ்தான் நாட்டவர் ஆவர்.

மலேசியா ஒரு வரையறுக்கப்பட்ட சட்ட வரம்பு கட்டமைப்பை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. இந்தத் திருத்தச் சட்டம், மலேசியாவுடன் கணிசமான தொடர்பைக் கொண்ட எந்தவொரு நபரும், குற்றம் வெளிநாட்டில் செய்யப்பட்டது என்ற காரணத்திற்காக மட்டுமே சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிவிட முடியாது என்பதை உறுதி செய்கிறது,” என்று தேவான் நெகாராவில் இந்த மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்துப் பேசியபோது அவர் கூறினார்.

மலேசியாவுடன் தெளிவான தொடர்பைக் கொண்ட, குழந்தைகள் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான போதுமான சட்ட வரம்பை மலேசியா கொண்டிருப்பதை உறுதி செய்ய இந்தத் திருத்தம் மிகவும் முக்கியமானது; இந்த குற்றங்கள் எல்லை கடந்த கூறுகளைக் கொண்டிருந்தாலும் இந்நடவடிக்கை சாத்தியமாகும் என்று குலசேகரன் கூறினார்.

குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, டிஜிட்டல் தடயவியல் விசாரணைகளில் காவல்துறை ஐந்து முக்கிய கவனப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் குற்றங்களை எதிர்த்துப் போராடும் முயற்சிகளில், டிஜிட்டல் ஆதாரங்களின் நம்பகத்தன்மை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக நீடிப்பதை உறுதி செய்ய, AI மாதிரிகளை பகுப்பாய்வு செய்தல், கணினி பதிவுகளை ஆய்வு செய்தல் மற்றும் ஐபி (IP) இணைய முகவரிகளைக் கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகள் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

‘முறையான டிஜிட்டல் சான்றுகள், நம்பகமான தடயவியல் பகுப்பாய்வு மற்றும் முழுமையான, உடைக்கப்படாத டிஜிட்டல் சான்றுகளின் பாதுகாப்புச் சங்கிலி ஆகியவற்றின் மூலம், டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கும் சந்தேக நபருக்கும் இடையிலான தொடர்பை நிறுவுவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கமாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த மசோதாவை இரண்டாவது வாசிப்பிற்காகத் தாக்கல் செய்த சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தத்துறை அமைச்சர் அசாலினா ஒத்மான் சைட், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர்களுடனும், அவர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பவர்களுடனும் மலேசியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது அல்லது அவர்களைப் பொறுத்துக்கொள்ளாது என்ற தெளிவான செய்தியை இந்தத் திருத்தம் வழங்குகிறது என்று கூறினார்.

கடந்த ஜூன் 30 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017’ (சட்டம் 792) இல் திருத்தங்களைக் கொண்டுவருகிறது.

 

 

 

 

 

-fmt