நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பாரிசான் நேசனல் மற்றும் பெரிகாத்தான் நேசனல் இடையிலான கூட்டணியை சாடியுள்ள டிஏபி துணைப் பொதுச்செயலாளர் ஹன்னா இயோ, இந்த உடன்படிக்கை இறுதியில் டைட்டானிக் கப்பலைப் போல மூழ்கிவிடும் என்று கணித்துள்ளார்.
பாரிசான் – பெரிக்காத்தான் கூட்டணி நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்பதால், பக்காத்தான் ஹரப்பான் ஆதரவாளர்கள் இது குறித்து கவலைப்படத் தேவையில்லை.
இந்த ஒத்துழைப்பானது துரோகத்தாலும், அரசியல் நட்பிற்கு விசுவாசமாக இல்லாதவர்களாலும் நிழலாடப்பட்டுள்ளது.
அவர்களது இந்த ஒத்துழைப்பை நான் டைட்டானிக் திரைப்படத்தில் வரும் கப்பலுக்கு ஒப்பிடுவேன்.
பாரிசான், பெரிக்காத்தான் ஆகிய இரு தரப்பினருமே பிரதமர் பதவியைப் பிடிக்க விரும்புகின்றனர். மேலும் உச்சியை அடைவதற்காக அவர்கள் ஒருவரையொருவர் மிதித்துக் கொள்வார்கள். எந்தவொரு தரப்பும் தனது கூட்டணிப் பங்காளியின் வெற்றியை விரும்பாது, என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான அவர்களின் ஒப்பந்தத்தின்படி, பாரிசான் 25 இடங்களிலும், பெரிக்காத்தான் மீதமுள்ள 11 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
கூட்டாட்சி அளவில் பாரிசான் கூட்டணியுடன் தொடர்ந்து நட்பு பாராட்டும் பக்காத்தான், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் உள்ள அனைத்து 36 இடங்களிலும் போட்டியிடுகிறது.
























