நாடாளுமன்றத்தில் உள்ள சுயேச்சை உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பு (TI-M)கேட்டுக் கொண்டுள்ளது.
“அரசாங்கத்திலும் எதிர்த்தரப்பிலும் சுயேச்சையாகவும் உள்ள அனைத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் பதவிகளை ஏற்றுக் கொள்ளும் போதும் அதற்குப் பின்னர் நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் அவ்வப்போது தங்கள் சொத்துக்களை முழுமையாக அறிவிக்க வேண்டும்,” என அந்த அமைப்பின் தலைவர் பால் லாவ் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தங்கள் சொத்துக்களுடைய முழுமையான விவரங்களை வழங்குவதற்கு உதவியாக அவர்கள் தங்களது கடன்களையும் முழுமையாகத் தெரிவிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் அவ்வாறு செய்வதின் மூலம் மலேசியாவின் நேர்மை, பொறுப்பு, நல்ல ஆளுமை குறித்து மக்களும் அந்நிய முதலீட்டாளர்களும் நம்பிக்கை கொள்வர் என்றும் லாவ் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் பினாங்கு அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை அறிவித்துள்ளது தனக்கு ஊக்கத்தைத் தந்துள்ளதாகவும் மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பு (TI-M) கூறியது.
பக்காத்தான் ராக்யாட் ஆட்சி புரியும் மாநிலங்களில் ஏற்கனவே சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து விவரங்களை அறிவித்துள்ளனர். பினாங்கு இரண்டாவது மாநிலம் ஆகும்.
நீதிபதிகள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ள யோசனையையும் அந்த அமைப்பு வரவேற்றுள்ளது. இப்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் அவ்வாறு அறிவிப்பது பற்றிப் பரிசீலித்து வருகின்றது.