பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது ஒரே மலேசியா கோட்பாடு அனைத்துலகத் தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக கூறியிருக்கிறார்.
அவர் இன்று காலை கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் கூடியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்நியப் பேராளர்களிடம் உரையாற்றினார்.
மிதவாதத்துடன் மலேசியா எப்போதும் இணைத்துப் பேசப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
“எங்களிடம் பல இன வம்சாவளிகள், பல சமயங்கள் உள்ளன. என்றாலும் ஒரே மலேசியா உணர்வு, மிதவாதப் பண்புகள் அடிப்படையில் உண்மையில் ஒர் ஐக்கியமான ஒற்றுமையான நாடாகத் திகழ நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.”
“எங்கள் வேறுபாடுகளை சகித்துக் கொள்வதைக் காட்டிலும் ஏற்றுக் கொள்ளும் போது நாம் வலுவாக இருக்க முடியும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அந்த உணர்வின் அடிப்படையில் உலக மிதவாதிகள் இயக்கத்தின் முதலாவது கூட்டத்துக்கு நாம் ஒன்று கூடியுள்ளோம்.”
கடந்த ஆண்டு ஐநா பொதுப் பேரவையில் உரையாற்றிய போது உலக மிதவாதிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என நஜிப் விடுத்த வேண்டுகோளின் விளைவாக அந்த மாநாடு நடத்தப்படுகிறது.
“மிதவாதக் குரலை” மேலோங்கச் செய்வதற்காக பிரதமர் அலுவலகத்தில் மிதவாதக் கழகம் (institute of Wasatiyyah) ஒன்று அமைக்கப்படும் என்ற தகவலையும் நஜிப் வெளியிட்டார்.
அது “ஜனநாயகம், சட்ட ஆட்சி, கல்வி, மனித கௌரவம், சமூக நீதி ஆகியவற்றில் மிதவாதப் போக்கை வலியுறுத்தும் என்றார் அவர்.
உண்மையில் உலகளாவிய இயக்கமாக மிதவாதம் திகழ வேண்டுமானால் எல்லா நாடுகளிலும் சமூகங்களிலும் விழிப்புணர்வு மேலோங்க வேண்டும் என்றார் பிரதமர்.
“எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து சமயங்களையும் வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் சேர்ந்த மிதவாதிகள் பேச வேண்டும்.”