சீரமைப்பு இல்லையென்றால் இன்னொரு பேரணி, பெர்சே கோடிகாட்டியது

தூய்மையான, நேர்மையான தேர்தல்களுக்காகப் போராடும் என்ஜிஓ-வான பெர்சே, தேர்தல் சீரமைப்பு தொடர்பிலான தன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படாவிட்டால் மீண்டும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும்.

இன்று கோலாலம்பூரில், வாக்காளர் கல்வி இயக்கம் ஒன்றைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி) முன்வைத்த பரிந்துரைகளை அதிகாரிகள் அமல்படுத்தாமல் போகலாம் என்று கவலையுறுவதாக தெரிவித்தார்.

“பிஎஸ்சி பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் போகலாம்.

“பரிந்துரைகளை அமல்படுத்தாவிட்டால் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக இன்னொரு பெர்சே பேரணி நடக்கலாம்”, என்றாரவர்.

ஜுலை 9 பேரணிக்குத் தலைமையேற்றிருந்தவர் அம்பிகா. அப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோலாலம்பூர் தெருக்களில் கூடிநின்று தேர்தல் சீரமைப்புக்குக் கோரிக்கை விடுத்தனர்.

பிஎஸ்சி-யின் பரிந்துரைகளும் அம்பிகாவுக்கு மனநிறைவைத் தரவில்லை.

பிஎஸ்சி பரிந்துரைத்த அழியா மை “நல்லதுதான். ஆனால், (பெர்சே-இன்) எட்டுக் கோரிக்கைகளில் அது ஒன்றுதான்.

“பிஎஸ்சி-இன் இரண்டாவது அறிக்கையில் மேலும் பல பரிந்துரைகள் சேர்த்துக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்”, என்றாரவர்.

இதனிடையே, பெர்சே,எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்கள் 100 விழுக்காடு திரண்டு வந்து வாக்களிப்பதை  ஊக்குவிக்கும் நோக்கத்தில் நாடு முழுக்க ஓர் இயக்கமொன்றையும் நடத்தவுள்ளது.

“ஜோம் 100” என்னும் தலைப்பைக் கொண்ட அவ்வியக்கம் சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் தொடங்கும்.

தேசிய இலக்கியவாதியான ஏ.அப்துல் சயிட் பெர்சே இணைத் தலைவரகாகவும் சமூக ஆர்வலரான மாணவர் சுக்ரி அப்துல் ரஸாப் இயக்கக்குழு உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் அம்பிகா தெரிவித்தார்.