கடன் ஒப்பந்தத்துக்கு முன்பே ரிம250 மில்லியன் பெறப்பட்டதா? மறுக்கிறது NFC

ஊழல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன்(என்எப்சி),அரசிடமிருந்து ரிம250மில்லியன் கடன் பெறும் ஒப்பந்தம் 2007-இல் கையெழுத்தானது என்று கூறி, ஒப்பந்தம் காணப்படும் முன்னரே அந்நிறுவனம் கடன்தொகையைப் பெற்றுக்கொண்டதென பொதுக் கணக்குக் குழு(பிஏசி) கூறுவதை மறுத்துள்ளது.

“என்எப்சி-க்கும் அரசின் பிரதிநிதியான நிதி அமைச்சுக்குமிடையிலான கடன் ஒப்பந்தம்  2007 டிசம்பர் 6-இல் செய்துகொள்ளப்பட்டது.சில தரப்புகள் தப்பாகக் கூறுவதுபோல் 2010-இல் அல்ல.

“முதல் தவணையாக 2008, ஜனவரியில் ரிம7மில்லியன் எடுக்கப்பட்டது.இது முறைப்படியே செய்யப்பட்டது”, என்று என்எப்சி வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

“கடன் ஒப்பந்தத்தில் காணப்பட்டுள்ளபடி இவ்வாண்டிலிருந்து என்எப்சி கடனைத் திருப்பச் செலுத்தத் தொடங்கும்”, என்றது மேலும் கூறியது.

கடந்த நவம்பரில், பிஏசி தலைவர் அஸ்மி காலிட், தம் குழுவின் விசாரணைகளிலிருந்து கடன் தொகை 2009-இல் விநியோகிக்கப்பட்டதாக தெரிய வருவதாகவும் ஆனால் கடன் ஒப்பந்தம் ஓராண்டுக்குப் பின்னர் 2010-இல்தான் கையெழுத்தானதாகவும் கூறியிருந்தார்.

மேலும், நிர்வாகச் சீர்கேடு, திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் தாமதம், இலக்குகளை அடிக்கடி மாற்றுதல் போன்ற பிரச்னைகளும் என்எப்சி-இல் நிலவுவதைத் தம் குழு கண்டறிந்ததாக அஸ்மி தெரிவித்திருந்தார்.

2010 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை, அந்நிறுவனத்தில் எல்லாமே “குளறுபடியாய் உள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து என்எப்சி பொதுமக்களின் உன்னிப்பான பார்வைக்கு இலக்கானது.

பிகேஆர், அந்நிறுவனம் கால்நடை வளர்ப்புத் தொழிலுக்காகக் கொடுக்கப்பட்ட அரசாங்கக் கடனை, ஆடம்பர கொண்டோமினியம்களையும் புத்ரா ஜெயாவில் நிலம் போன்றவற்றையும் வாங்கவும் சுற்றுலா செல்வதற்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியது.

அப்போது, ரெம்பாப் எம்பி கைரி ஜமாலுடின் என்எப்சி மொண்டோ வாங்கியதைத் தற்காத்துப் பேசினார். சும்மா கிடக்கும் நிதியை “முதலீடு” செய்யும் உரிமை அந்நிறுவனத்துக்கு உண்டு என்றாரவர்.

TAGS: